27 Feb 2011

26 Feb 2011

கதையல்ல உண்மை காதல்.......


நான் பொதுவே காதல் கதைகளை கதைப்பது கிடையாது.  காரணம் காதல் நபருக்கு  நபர் வேறுபடும். ஒரு பொது தத்துவத்துக்குள்  காதலை கொண்டு வர இயலாது என நான் அறிவேன்.  காதன் தினம்  அன்று என் கல்லூரி  பொது பலகைக்கு என ஒரு குறிப்பு தயார் செய்திருந்தேன். வாசித்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் கற்பித்து விமர்சித்தனர். சிலர் கோபத்தில் நான் ஒட்டியிருந்த சில படங்களை கூட கிழித்து போட்டனர். நான் எழுதியதை முழுதும் வாசிக்காது “நீங்கள் இப்படிபட்டவர் என்று நான் நினைக்க வில்லை” என ஒரு திருமணம் ஆகாத ஆராய்ச்சி மாணவி கடிந்து கொண்டாள்.  காதலை வேலையற்றவர்கள் கொள்ளும் விளையாட்டாக ஒருவர் அபிப்பிராயம் கொண்ட போது சிலர் அது பணம் பறிக்கும் குறுக்கு வழி அல்லது உடல் சுகம் தேடும் தளம் என சொல்லினர்.

நான் மதிக்கும் காதல் என்னுடைய பாட்டி மரியாகம்மாவின் காதல் தான், ஆனால் அதே காதலை என் அம்மா இன்றளவும் வெறுத்தார்.   60 வருடம் முன்பு  ஏதோ ஒரு தேசத்தில்( மிளகுமூடு, நாகர்கோவில்) இருந்து வந்தவனிடம் காதல் கொண்டு பெற்றோர் சகோதரர்கள் எல்லோரையும் பகைத்து திருமணம் செய்து இரு பிள்ளைகள் பிறந்த சூழலில் வெறும் மூற்றே வருடத்தின் தாத்தாவை பறி கொடுத்தார் என் பாட்டி!.  ஆனால்  அதே காதலுடன் வாழ்ந்து வருகின்றார்.  பாட்டியின் ஒவ்வொரு செயலும் தன் மகள் படிப்பு ஆகட்டும் திருமணம் ஆகட்டும் எல்லாம் தாத்தா வாழ்ந்த நாளில் ஆசையுடன் கதைத்தது போலவே இருந்தது.  அம்மா ஒரு போதும் தங்கம் அல்லாத நகை அணிய கூடாது, தேயிலை தோட்ட வேலைக்கு செல்லக்கூடாது அம்மாவை வசதி-வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்ற தாத்தாவின் கனவை நனவாக்குவது போலவே இருந்தது பாட்டியின் வாழ்க்கை . 

ஒரு கேரளா பத்திரிக்கையில்  வந்த செய்தியில் ஒரு இந்து மத  பெண்ணும் இஸ்லாம் ஆணும் காதலித்துள்ளனர்.  பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு. அப்பெண்ணும் அவர் பெற்றோர் சம்மதத்திற்க்கென காத்திருந்தார்  45  வயது கடக்கும் வரையிலும்!   அதற்க்குள் அப்பெண்ணின் அப்பா ஒரு சகோதரர் இறந்து விட்டனர், தன் சகோதரிகளுக்கும் திருமணம் ஆகி பிள்ளை குட்டி ஆகி விட்டது இனி யாருக்கும் தன்னால் பிரச்சனையில்லை ,இனி காதலருடன் இணையலாம் என்று எண்ணி கொண்டிருந்த போது அந்த காதலர் ஒரு விபத்தில் மரித்து போனார். ஆனாலும் அப்பெண் தளரவில்லை மிச்சமுள்ள நாட்கள் அவர் வீட்டில் அவர் மனைவியாக இருந்து கொள்கிறேன் என்று அவர் வயதான அம்மாவையும் கவனித்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.

நான் பிறவியிலே கேள்வி கேட்கும் கொள்கை கொண்டதால் காதலைக் கூட கேள்வியோடு தான் அணுக முடிந்தது.  அதனால் யாருடனும் காதலும் வரவில்லை . என்னவரை எனக்கு என என் பெற்றோர்கள் பேசி முடித்த போதும் 1 வருடம் வரை சரி வருமா, அவர் எப்படி பட்டவர், அவர் சம்பளம் வாழ்க்கை தேவைக்கு தகுந்தாக இருக்குமா, அவர் பெற்றோர் எப்போதும் என்னை உண்மையாக நேசிப்பார்களா என்று பல வித கேள்வியுடனே இருந்தேன். 

காதல் பற்றி கொண்டது எப்போது என்று தெரியவில்லை , ஆனால் ஒரு கட்டத்தில் அவர் பெற்றோர்கள் இத்திருமணத்தை பணம் பறிக்கும் கருவாக காண்கின்றனர் என்று அறிந்து என் பெற்றோர் பின் வாங்க நினைத்த போது, இல்லை, நான் அவரை விரும்பி விட்டேன் நான் பணம் பறிக்கும் கேடயமாக இருக்க மாட்டேன் என சொல்லி எனக்கும் காதல் வந்து விட்டது என அறிவித்து விட்டேன்.  என்னை வைத்து பணம் ஈட்ட இயலாது என்று எப்போது முடிவெடுத்தாரோ என் மாமியார் அப்போதே என்னை மட்டுமல்ல என்னவரையும் சேர்த்தே ஒதுக்கி தள்ளி விட்டார்!

என் முதல் மகன் 7 வது மாதம் கருவுற்றிருக்கும் போது என் மாமியார் தன் கடைசி ஆயுதத்தை பயண்படுத்த நினைத்தார்!   உன் அப்பா வீட்டில் நாங்கள் கேட்கும் முறை செய்யாவிட்டால்  நீ எங்கள் வீட்டிற்கு வர தேவையில்லை என கட்டளையிட்டார்.  என் அம்மாவும்  நம்ம அப்படி எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல; அப்படி அம்மா பேச்சு கேட்கின்றவன் மனைவியாக நீ அடிமையாக இருக்க வேண்டாம்.  இனி அங்கு போனால் இங்கு பிரசவத்திற்கு கூட வர வேண்டாம் என பிடிவாதமாக இருந்தார்.  ஒரு நாள்  என்னவர்  வசிக்கும் வீட்டுக்கு நானே வந்து சேர்ந்தேன். 
  
அதன் பின்பும்  இந்த பணம் பேராலுள்ள போராட்ட வாழ்க்கையை வேண்டாம் பிள்ளையை அம்மாவிடம் கொடுத்து விட்டு படித்து வேலை பார்த்து பிள்ளையை வளர்த்து கொள்ள வேண்டியது தான் என எண்ணி கொண்டிருந்த போது   அவர் வந்து அழைத்த உடன் அவர் பின்னே ஒன்றும் சொல்லாது சென்றதும் எங்களிடம் இருந்த  காதல் தான்!

மறுபடியும் வேலை மாற்றம், வேலை இல்லை என தவித்த போது அம்மா உனக்கு இந்த தரித்திர வாழ்க்கை தேவையா நான் பார்த்து கொள்வேன் என கூறிய போதும்  வெறும் தயிர் சாதம் உண்டு அவர் பக்கம் இருக்க என்னை தூண்டியதும் எங்களுள்  இருந்த காதல் தான்!

ஒரு முறை அவருடைய  ஒரே, அவரிலும் 7 வயது இளைய சகோதரன்  நீ ஒன்றுக்கும் ஆகாதவன் பள்ளியில் தவளை பிடித்தாய், காலேஜில் பெண்களிடம் வம்பிழுத்தாய் இப்போது இரண்டு பிள்ளைகளை பெற்று போட்டதை தவிர்த்து என்ன செய்தாய் என்று கேட்ட அன்றிலிருந்து அவனிடம் பேசுவது ஏன் அவனை ஒரு மனிதனாகவே நினைப்பதைக் கூட தவிர்த்து விட்டேன்.

பல பொழுதும் என்னவரிடம் நான் ஒரு சண்டை கோழி என்றாலும் அவரின் பேருள்ள காதலால் அவரை பழித்த அவரை எதிர்த்தவர்களிடம் நான் பேயாகவும் அனல் காற்றாகவும் இருந்து அவரை மீட்டதும் எங்கள் காதல் தான்.  அதே போல் என்னை நானாக அவர் பார்த்ததும் என்பாலுள்ள  அவர் காதலே. என் காதல் பல பொழுதும் எங்கள் கண்ணீரில் இருந்து துவங்கி நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளில் முடிந்தது.  அதனாலே நாங்கள் குடு குடு  தாத்தா பாட்டி ஆகும் வரையிலும் இதே காதலில் இருந்து காமமல்ல காதல் அது உண்மையான அன்பு சார்ந்தது என்று தெரிவுபடுத்த வேண்டும்.

25 Feb 2011

சாதாரண குடிமகனின் நிகழ்வுகள்!!!!!



இரண்டு மாதம் முன்பு எங்கள் 8 வயது மகனுடன் சென்னை சென்றிருந்தோம். அவனின் உயரம் 132 க்கு மேல் இருந்ததால் பிறப்பு சாற்றிதழும் கருதியிருந்தோம். சென்னை செல்லும் போது டிக்கட் தருபவர் அரை டிக்கட்டு தந்து விட்டார். மேலும் சட்டத்தையும் நினைவுபடுத்தி கொண்டார்.  திரும்பி வரும் போதும் சாற்றிதழ் இருக்கும் தைரியத்தில் பேருந்தில் இடம் பிடித்து இருந்து விட்டோம். பேருந்தும் கிளம்பி விட்டது. என்னவ்ரும் என் மகனும் இருவர் சீட்டில் இருந்து விட்டனர்.  நாகர்கோயில் சேர்ந்த ஒரு பெண் அருகில் நானும்.   நான் 25 கொடுத்து அப்போது தான் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி  குளிர் மாறுவதற்கென கையில் வைத்திருந்தேன்.  என் கையிலுள்ள தண்ணீர் பாட்டிலை பார்த்தவுடனே அப்பெண்ணுக்கு தாகம் வந்து விட்டது  கொஞ்சம் தண்ணீர் தாருங்களேன் என்று கேட்டார். ஒரு பாட்டில் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டியது தானே என்று மனதில் நினைத்து கொண்டே கொடுத்தேன்.
பல பொழுதும் பயணங்களில் சிலர் நம்மை இளிச்சவாயர் ஆக்குவதை என்ன செய்ய என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே பேருந்து ஓட்டுனர் ஹான் அடித்து பேருந்து தயாராகி விட்டது என சிக்னல் கொடுத்தார்.   நல்ல வசதியான இருக்கை  இனி டிக்கட் எடுத்து விட்டு தூங்க வேண்டியது தான் என முடிவெடுத்து இருந்த போது நடத்துனர் அருகில் வந்து 3 டிக்கட் என்றார். நாங்கள் சாற்றிதழை கொடுத்தவுடன் அதை நான் ஏற்று கொள்ள இயலாது இச்சாற்றிதழில் இருக்கும் சிறுவனின் பெயரும் இச்சிறுவனும் ஒரே ஆள் என்று நான் எப்படி அறிந்து கொள்வது.   நீங்கள் என்னை ஏமாற்ற வேறு ஒரு சிறுவனின்  சாற்றிதழ் கொண்டு வந்திருந்தால் நான் தான் போலிஸில் மாட்ட வேண்டும் என என்னவெல்லாமோ புலம்புகின்றார்.  பையன் உயரம் கணக்கு பண்ணி டிக்கட் தர வற்புறுத்துகின்றார்.  நாங்களும் விடும் படி இல்லை. நாங்கள் வரும் போதும் அரை டிக்கட்டு தான் எடுத்துள்ளோம் அப்படி போலிஸ் கேஸ் என வந்தால் நாங்கள் வர தயார் என் சொல்லியும் வடபழனி அருகில் வந்த போது பேருந்தில் இருந்து உடனே இறங்க வேண்டும் என்று கட்டளை இடுகின்றார். நாங்களும் விடும் படியில்லை பேருந்தில் இருக்கும் பண்பானவர்கள் எல்லாம் அமைதியாக இருந்து காட்சியை பார்த்து கொண்டிருக்கின்றனர். ஒரு குரல் கூட ஆதரவாக இல்லை!  அதில் இருந்த ஒருவன்;  சினிமா டிக்கட்டு  அரை டிக்கட் என்று நீங்கள் வாங்குவது உண்டா பேருந்தில் மட்டும் அரை டிக்கட்டு கேட்கின்றீர்கள் என நடத்துனருக்கு வக்காலத்து வாங்குகின்றான்.   பேருந்தில் இரு காவலர்கள் கைதியுடன் பயணித்தனர்.  அவர்களாவது நியாயம் பேசுவார்கள் என்றால் நடத்துனர் பாவம் அவர் கோர்ட்டுக்கு அலைய இயலுமா,  நீங்க முழு டிக்கட் எடுங்கள் அல்லது பேருந்தை விட்டு இறங்குகள் எங்கள் பயண நேரத்தை கெடுக்காதீர்கள் என கூக்குரல் இடுகின்றனர்.  
இனி வேறு வழியில்ல என்று தெரிந்தவுடன் நாங்கள் ஏறிய  பேருந்து நிலையத்தில் கொண்டு விடுங்கள் என பிடிவாதமாக  இருந்து விட்டோம்.  நடத்துனர் பயமுறுத்தியும் கண்டுக்கவே இல்லை. வேறு வழியில்லாது ஒரு ஆட்டோவை பிடித்து பேருந்து நிலையத்திற்க்கு ஏற்றி விட்டான்.  பேருந்து நிலையம் வந்து புகார் கொடுக்கலாம் என்றால் அங்கு காவலர்கள் தற்போது  காப்பி குடிக்க சென்று விட்டதாகவும் திருநெல்வேலியில் முறையிடவும் கூறிவிட்டனர்.  இங்கு வந்து முறையிட்டு  2 மாதமாக காத்திருக்கின்றோம் ஒரு செய்தியும் தெரியவில்லை.   பேருந்து நடத்துனர் கூட அரசு கொடுக்கும் பிறப்பு சாற்றிதழை மதிக்கவில்லை என்றால் அரசு சார்ந்த சாற்றிதழ்கள் அவர்கள் அலுவலகர்களுக்கு லஞ்சம் பெறமட்டுமே உதவும் என்றே தோன்றியது.
 சமீபத்தில் கூட ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
நவம் 27 தியதி ரேஷன் கடைக்கு சென்று சீனி வாங்க சென்றிருந்தேன். ரேஷன் கடை எங்கள் வீட்டில் இருந்து 3 கி.மீ தள்ளி ஒரு ஒதுக்கு புறமான வீட்டில் நடத்துகின்றனர்.  என்னவர் உள்ளூரில் இருக்கும் போது அவருடன் செல்வதே சாத்தியமான வழி.  அவர் உள்ளூரில் இருக்கும் போது ரேஷன் கடை விடுமுறை நாட்களாக இருக்கும். செவ்வாய், வியாழன், சனி மட்டுமே ரேஷன் உள்ள நாட்கள், கடைசி சனியும்  விடுமுறை தான்.  10 துவங்கி 1 வரை  மதியம் 2 துவங்கி 6 மணி வரை நேரம் என குறிப்பிட்டிருந்தாலும் ரேஷன் கணக்கு எழுதுபவன் நிறுப்பவன் முனு முனுத்து கொண்டே தான் தருவர்.  5 மணி க்கு சென்றால் இனி கணக்கு பார்க்கும் நேரம் என்று திருப்பி அனுப்பி விடுவர்.  2மணிக்கு சென்றாலோ சாப்பாட்டு நேரம் இப்படி அவர்கள் வீட்டில் இருந்து மக்களுக்கு தருவது போல் தான் கவலைபட்டு கொள்வர்.    நான் இந்த மாதம் சீனி வாங்க  சென்ற போது உங்கள் ரேஷன் கார்டில் பக்கம் இல்லை ஏன் ஒட்டவில்லை, உங்களுக்கு தெரியாதா எல்லா தொலைகாட்சியிலும் இதை தானே சொல்கின்றார்கள் நீங்கள் என்ன பண்ணி கொண்டிருந்தீர்கள் என ஒரே கேலி கிண்டலுமான அறிவுரைகள். போதாத குறைக்கு  என்னை போல் சீனி வாங்க வந்தவனும் எங்கள் கார்டை பார்த்தீர்களா நீங்க மட்டும் எங்க போனீங்க என்ற கிண்டல் வேறு!!!  நான் 27 தியதி வந்த போது நீங்கள் தான் ஒட்டி தரவில்லை  நான் பொறுப்பல்ல  எனக்கு சீனி தந்தே தீர வேண்டும் என கதைத்து கொண்டு நின்றேன். ஆனால் சட்டத்திற்க்கு புறம்பே சீனி தர இயலாது வரும் செவ்வாய் வாருங்கள் பார்ப்போம் என திருப்பி அனுப்பினார். வரும் வழியில் ஒரு  'அம்மா' கட்சிகாரரை பார்த்து  ரேஷன் கார்டு  ஒட்டி வாங்கினோம்.  இப்படியாக   சாதாரண் மக்கள் வாழ்க்கையை கேலிகுரியதாகவே மாறுகின்றது.  மக்கள் என்ற ஒரு கூறுகெட்ட கூட்டம் வேறு இவ்வகையான சுரண்டலுக்கு குடைபிடிப்பதால் எம்மை போன்றோரும் ஏதாவது கட்சியில் சேராது வாழ இயலாது போலவே உள்ளது! 

13 Feb 2011

பள்ளிகூடங்களும் மாணவர்கள் வாழ்கையும்!


7 வகுப்பு என்பது மகிழ்ச்சியான மட்டுமல்ல என் வாழ்கையை நிர்ணயித்த வருடமானது!  ஒவ்வொரு வருடமும் தலைவி பதவி என்னை தேடி வந்தது. காரணம் ஒரே வகுப்பின் 100க்கு மேல் மாணவர்கள் படிப்பதால் வகுப்பு தலைவர் பதவி என்பது ஒரு ஆசிரியர் ஒத்தே மிகவும் தேவையானதும் இன்றிமையாதகாகவும் அவர்களுக்கு உதவுவதாகவும் இருந்தது. மேஜையில் ஒரு கம்பால் அடித்து ஒரு ஹால் மாணவர்களை அமைதியாக இருத்த பழக்கப்பட்டேன்.  எப்போதும்  ‘மாதிரியாக’,  ஒரு கண் பார்வைக்குள் இருப்பதால் மற்று மாணவர்கள் அனுபவிக்கும் சுதந்திரம் பறி போனது இருப்பினும் கிடைக்கும் அங்கிகாரம்,  பொறுப்பு ஏற்க்கும் சூழல் என்னை வளர்த்து கொள்ள பலவிதத்தில் உதவியது அதில் ஒரு மகிழ்ச்சியும் இருந்தது.. என் வகுப்பு தோழர்களின்  மார்க்கு அவர்கள் நலன், குறைவு கண்டுபிடிப்பதில் ஒரு பங்கு இருந்து கொண்டே இருந்தது. நம்மை சுற்றி ஒரு ஆதரவு பட்டாளம் இருப்பது போலவே எதிரி கூட்டமும்  சேர்ந்து கொண்டே தான் இருந்தது.  100 மாணவர்கள் இருப்பினும் 10 பேரை எல்லா பாடத்திற்க்கும் ஜெயிப்பவராக இருந்துள்ளோம் எங்கள் வகுப்பில்!  அவர்கள் நேரத்திற்க்கு பள்ளி வந்து  சேருவதே ஒரு போராட்டமாக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கை சூழல் எதிற்மறையாக இருந்தாலும் வேலை வாய்ப்புக்கள் அவர்களை சுற்றி எப்போதும்  இருந்ததாலும் போட்டி போட்டு படிக்கும் சூழலுக்கு தள்ளப்படவில்லை.  மட்டுமல்ல அதை எண்ணி கவலை கொள்ளும் போல் ஒருவரும் இருக்கவில்லை.  என் வகுப்பு தோழி என எங்கள் பள்ளி ஆசிரியரின் மகள் மோன்சி, ஒரு மாட்டு வியாபாரியின் மகள் ஷீபா, ஓட்டத்தில் விருது வாங்கும் சாலி , அன்னம்மா டீச்சரின் மகள் அனி, தேயிலை எஸ்டேட் ஊழியரின் மகள் வினிதா, தொழிலாளர்களின் மகளான பிந்து, ரஜனி என ஒரு பெரிய பட்டாளம் இருந்தோம்.  இதில் மோன்ஸிக்கு என்னிடம் ஒரு பொறாமை இளக்கார  மனோபாவமாகவே இருந்தாள். அவள் அம்மாவும் என் அம்மாவை காணும் போது “நிங்களே கண்டால் தமிழர் என்னே பறயத்தில்லா, விர்த்தியில்லாத துணியும் நாற்றம் பிடிச்ச தலை முடியுமல்லே தமிழர்” என முகத்தை பார்த்தே கதைப்பார். மோன்ஸிக்கு அவள் அம்மாவை அவ்வளவாக பிடிப்பதில்லை. அவளின் கருத்துக்கள் அவளுடைய கம்னிஸ்டு வாத்தியார் அப்பா ஒத்தே இருந்தது. அவர் அப்பா கூட எங்களுக்கு கணித பாடம் எடுத்தாலும் எனக்கு ஆங்கிலம் கத்து கொடுக்கும் ஷம்சுதின் சார்  வழிகாட்டி, ஜிகெ புத்தகம் என அவர் ஊர் கோட்டயத்தில் இருந்து வாங்கி தருவதில் கொஞ்சம் எரிச்சல் கொண்டே இருந்தார். ஷம்சுதின் சார் இஸ்லாம் என்பதால் தொழுகைக்கு தண்ணீர் எடுத்து கொடுப்பது என் பணியாக இருந்தது. மலை மேல் பள்ளி யிருந்தாலும் தேயிலை தோட்டத்தில் தண்ணீர் எங்கு இருக்கும் என எங்களுக்கு அத்து பிடியாக இருந்தது.  தொழிலாளர் பிள்ளைகள் அன்புக்கு கட்டுப்படுவதால் அவர்கள் உதவி ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுப்பதில் எளிதாகவே இருந்தது.
எங்களுக்கு தினம் காலையில் வேலை இருக்கும்.  எங்கள் பள்ளி வராந்தாவில் தான் தொழிலாளர்களின் மாடுகள் தூயில் கொள்ளும் இடம்! காலையில் சென்றவுடன் சாணியை சுத்தம் செய்யும் வேலை எங்களை சார்ந்தே இருக்கும். எப்போதும் தண்ணிர் எடுத்து கொடுக்கும் பணியை நான் செய்து வருவதை கண்ட ஹரிகரன் சர் “எடி ஒரு திவஸம் நின்னே சாணம் வாரிப்பிம்” என கலாயிப்பார். நான் டவுணில் வசிப்பதால் சாணி மணம் கொஞ்சம் அன்னியமாகவே இருந்தது. ஆனால்  என் எஸ்டேட் தோழிகள் “ஞங்கள் தூத்தோளாம்” என விளக்கு மாரை பிடிங்கி கொள்வர். நானும் “ஞான் செய்யாம்” என படம் காட்டியே காலத்தை தள்ளி வந்தேன்.
அவ்வருடம் பள்ளி தலைவி ஆகும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. என் எதிராளி நிர்மலை ஒரு ஓட்டுக்கு தோற்கடித்து நான் தலைவியானேன்.    (நிர்மல் பட்டப்படிப்பு முடித்த வருடம் இதய நோயால் இறந்து விட்டான்)    ஸ்பீக்கர் பதவி தமிழ் மாணவனுக்கு (பெயர் மறந்து விட்டது) கிடைத்து.  அவனுக்கு வர வர என்னிடம் ஒரு ‘அதீத’ பாசம்.   ஒரு கடிதம் கொடுத்து விடட்டுமா என அவன் நண்பியிடம் கேட்டு விட்டிருந்தான்.  நானும் “ஆ பட்டியோடு போகான் பற” என பதில் சொல்லி அனுப்பினேன். அவன் நண்பர்கள் எப்படிடா ஒரு மலையாளம் மீடியம்காரி நம்மை பட்டி(நாய்) ன்னு கூப்பிடுவது என அவனை உசுப்பி விட்டு "அவ எங்களை பட்டி ன்னு கூப்பிட்டா" என மட்டும் சொல்லி விட்டான் வாத்தியாரிடம்!. ஜோர்ஜ் ஜோண் சார் என்னை அழைத்து மேரி குஞ்ஞே ஆண்குட்டிகளை அங்கனை விளிக்கருது, தமிழ், மலையாளம் என்னு வழக்கு வரும் என அறிவுரை கூறினார். பத்து முடியும் போதும் அவனிடம் ஒரு கடுப்பு எனக்கு இருந்து கொண்டே  தான் இருந்தது.
நாங்கள் பள்ளிக்கு செல்வதும் வருவதும் தேயிலை தோட்டம் ஊடையுள்ள வழியாகவே இருந்தது.  படைசூழ பள்ளிக்கு சென்று வருவது தான் வழக்கம். இதில் பாதுகாப்பு, பந்தா எல்லாமே அடங்கி இருந்தது. ஒரு முறை எங்கள் தோழி செல்லும் பேருந்து வந்து விட்டது அவள் நிறுத்தம் வரும் முன். நாங்கள் கூட்டமாக சேர்ந்து குரல் எழுப்பி கொண்டே மலையில் இருந்து தாவி ஓடி வந்தோம். பேருந்துகாரனும் மாணவர்கள் ஸ்ரைக் போல் என எண்ணி பேருந்தை நிற்த்தினார். எங்களுக்கு போரில் வென்ற திருப்தி. அவளை பேருந்து ‘கிளியும் ஓட்டுனரும்’ சேர்ந்து கலாயித்தது வேறு கதை. (பேருந்தில் மணியடிப்பவரை எங்கள் ஊரில் கிளி என்று அழைப்போம்)
உயர்நிலை பள்ளி மாணவர்கள் எங்கள் வழியே தான் அவர்கள் பள்ளிக்கு செல்வர். அதில் புத்தக பை கொண்டு வராது கையில் ஸ்டைலாக புத்தகம் கொண்டு வரும் 4- 5 மாணவர்களுக்கு எதிரில் நடந்து  வரும் எங்கள் பள்ளி மாணவிகளை கட்டி பிடிப்பதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்கள். மாணவிகள் அலறியடித்து ஓடுவதை காண அவனுகளுக்கு ஒரு ஆனந்தம். ஒரு நாள் எங்கள்  குழுவை குறிவைத்து  வந்தாங்க. நாங்க ஏற்கனவே கருதி வைத்திருந்த பின்னை(ஊக்கு) வைத்து கீச்சி விட்டு விட்டோம். அவனுகள் பயந்து ஓடி போய் விட்டான்கள்.  ஆனால் எங்கள் பள்ளி மாணவர்கள் ராஷேஸ்,சபீர் போன்றோர் எங்கள் ஆசிரியர்களின் இச்சம்பவத்தை பற்றி சொல்லியுள்ளனர். மாணவர்  தலைவியாக இருந்தும் எங்களிடம் ஏன் முறையிடவில்லை என கடுந்து கொண்டனர். இருப்பினும் எங்கள் வீரத்தை சில ஆசிரியர்கள் பாராட்டாதும் இருக்கவில்லை.  எங்கள் ஆசிரியர்கள் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை லக்ஷ்மி குட்டியிடம் தெரிவித்துள்ளர். அம்மாணவர்கள் அவர்கள் தான் எங்களை ‘காம்பஸ்’ எடுத்து குத்த வந்தார்கள் என கதைத்துள்ளனர்.
அம்மாணவர்களுக்கு சூரல் வைத்து இரண்டு அடியை கொடுத்து திருத்தியிருக்கலாம் அதை விடுத்து 10 நாள் சஸ்பென்ஷன் என கலவரமாக்கிவிட்டனர் உயர்கல்வி ஆசிரியர்கள். அதில் ஒருவன் ஆ தமிழச்சியா இதினு காரணம் அவளை ஞான் கெட்டி(திருமணம் செய்து) அவளுடை புறம் பொளிக்கும் என வீறாப்பு பேசி நடந்துள்ளான்.
பின்பு 7 வகுப்பு முடிந்து  உயர்நிலை பள்ளிக்கு சென்ற போது லக்ஷ்மி குட்டி அம்மா ஏதோ கத்தியெடுத்து குத்த சென்றது போல் என்னிடம்  கேள்வி கேட்டார். நான் 10  முடியும் வரையிலும் நான் அவருக்கு நோட்ட புள்ளியாகவே இருந்தேன். போதாத குறைக்கு அவர் மகன், அவன் தெரு பொறுக்கி   நண்பர்களிடம்  எனக்கு ‘காம்பஸ் ஜோசபின்’ என்ற பெயர் நிலைக்க செய்தான்.

12 Feb 2011

ஒரு புலனாய்வு கதை!


ஆருஷிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாட்டம்.  நேற்று தான் சிங்கபூர் சுற்றலா சென்று விட்டு வந்திருந்தனர்.  அவள் நண்பர்களை அழைத்திருந்தார்கள். அவளுடைய பெற்றோர் மருத்துவர்கள் ஆனதால் அந்த ஊரிலுள்ள மருத்துவ நண்பர்கள் குடும்பம் குழந்தைகள் படை சூழ  வந்திருந்தனர். சிலர் அவர்கள் பணியாளர்களையும் கூட அழைத்து வந்திருந்தனர், அவர்கள்  குழந்தைகள் முரண்டு பிடித்தால் அடக்குவதற்க்கு  பயன்படும் என.

ஆருஷியின் அப்பா அவளுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு கணிணி வாங்கி தந்திருந்தார்! அவள் நண்பர்களை அழைத்து காட்டினாள். அவர்கள் இணைய முகவரியும் வாங்கி வைத்து கொண்டாள்.  எல்லா வசதியுடனான புது தொழில்நுட்பம் அடங்கிய கணிணியாக இருந்தது.
 அவள்  அப்பாவை தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அவள் சாயல் கூட அப்பாவை ஒத்தே இருந்தது. அம்மா ஒரு “மாதிரி” மருத்துவராக இருந்தார் ஆனால் அம்மாவாக அல்ல.   அவள் பெற்றோர் கல்லூரியில் படித்தபோது காதல் திருமணம் புரிந்ததால் உறவினர்கள் விட நண்பர்களே அதிகம் இருந்தனர். ஆகையால் பாட்டி தாத்தா மாமா சித்தி சித்தப்பா போன்ற உறவுகள் அவளை சுற்றி இருக்க வில்லை. அப்பா ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அம்மா என்ற பெரிய பணக்காரி மனைவி அமைந்ததால் குறுகிய காலத்துக்குள் பணக்காரர் ஆனாலும் உறவுகள் இல்லை என்ற ஏக்கம் அவருக்கும் இருந்தது. ஆருஷியே அவருக்கு எல்லாமாக இருந்தார். 
வேலைக்காரர் புக்கா சிங்கு தான் அவளுக்கு  உறவினர், வேலைக்காரர்   என எல்லாமாக இருந்தான்.  அவள் பேசுவதை கேட்பது  அவளுக்கு கதை சொல்லி கொடுப்பது என புக்கா சிங் ஆகவே இருந்தான்.  பள்ளி விட்டு வரும் போது புக்கா சிங்கு தான் புத்தக பைய்யை வாங்கி வைத்து விட்டு பழ ஜூஸ் அல்லது பிரடு டோஸ்டு ஓவனில் இருந்து எடுத்து தருவார்.


பல நாட்கள் அம்மாவும், அப்பாவுடைனே வீடு வந்து சேர்ந்தார். அவருக்கு வேலையுடன் இருந்த ஈடுபாடு வீட்டுடன் இருந்திருக்க வில்லை.  வீட்டிலுள்ள பொருட்கள், தன் மகள் ஆருஷியை கூட வேலைக்காரர்கள் தெரிந்த அளவில் அவள் அம்மா தெரிந்திருக்க வில்லை!  ஆருஷி யின் 13 வயது  பிறந்த நாள் சில நாட்கள் பின்பு அவர் அப்பா ஒரு முறை அம்மாவிடம் சொல்வது கேட்டது, ” நீ இனி பகுதி நேரம் மருத்துவ மனையில் வேலை செய்தால் போதும். நம் பெண் பள்ளி  விட்டு வரும் போது வீட்டில் இரு என” . ஆனால் அம்மாவோ அவ என்ன சின்ன குழந்தையா வேலைக்காரன் புக்கா சிங்கிடம் சொல்லியுள்ளேன் . அவன் பார்த்து கொள்வான் என பதில் கூறுவதும் கேட்டது.  
புக்கா சிங்கு பங்காள் தேச இன கலவரத்தின் போது இங்கு வந்து சேர்ந்தார். ஆருஷியின் தந்தையின் மருத்துவ மனையில் உதவியாளராக பணி எடுத்து கொண்டிருந்தார். அவரின் பொறுப்பாக பணி செய்வதை கண்டு வீட்டு வேலைக்கு என அமர்த்தினார் அவர் அம்மா!  உணவு தயாரிப்பது ஆருஷியை பள்ளிக்கு அனுப்புவது, பள்ளி விட்டு வந்தவுடன் உணவு கொடுப்பது. தூங்கும் முன் குடிக்க ஜூஸ் கொடுப்பது என சகலவும் அவரே பார்த்து கொண்டார். ஆண் வேலையாள் மேலும் முதியவர் என்பதால் ஆருஷி அம்மா எல்லா வகையிலும் தற்காப்பு என் எண்ணினார். அவரின் அறை ஆருஷியின் வீட்டின் மேல் மாடியில் இருந்தது. வீட்டுக்கு உள் வருவதற்க்கும்   வெளியில் செல்லவும் இரு கதகுகள்  இருந்தது. புக்கா சிங்கை தாத்தா என்றே கூறி வந்தாள் ஆருஷி. வீட்டில் தனியாக இருக்கும் போது நேரம், போக அவரிடமே பேசி கொண்டிருப்பாள் டிவி பார்க்காத போது. அவருக்கும் மகன், மகள் பேரபிள்ளைகள் என பெரிய குடும்பம் இருந்தது .

 புக்கா சிங்கின் மகள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரின் தூரத்து உறவினரான ஒரு வாலிபனுடம் காதலில் இருந்தார். அவனை திருமணம் செய்ய புக்கா சிங்கு அனுமதித்தாலும் வேலை இல்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது. அவன் செவிலியர் பயிற்ச்சி  பெற்றவனும் கூட. புக்கா  சிங்கு ஒரு முறை ஆருஷி அப்பாவிடம் தன் உறவினருக்கு வேலை தந்து உதவும் படி கேட்டிருந்தான். மருத்துவரும்  தேவை வரும் போது அழைப்பதாக சொல்லியிருந்தார். அவரிடம் வேலை பார்த்த  ஒரு நபர் திடீர் என வெளி- நாட்டில் வேலை கிடைத்து சென்றதால் வேலையாள் தேவை வந்தது. புக்கா சிங்கிடம் உறவினரை அழைத்து வர கூறினார். டாக்டருக்கு புக்கா சிங்கின் உறவினரை பார்த்தவுடனே பிடிக்க வில்லை.  அவன் பார்வை செயல் எல்லாவற்றிலும் ஒரு திமிர் தென்படுவதாக தோன்றியது. ஆனால் வேறு வழியில்லை. சில கன்டீஷனுடம் வேலைக்கு சேர்த்து கொண்டார்.


 டாக்டர் இல்லாத போது அரட்டையடிப்பது, வேலையின் கவனம் கொள்ளாது அசால்டாக இருப்பது  தொலை பேசியில் கதைத்து கொண்டிருப்பது என எரிச்சலையே கொடுத்தது அவருக்கு வரும் நாட்களில் . ஒரு முறை ஒரு நோயாளியின் பல்லை பிடிங்கி கொண்டிருந்த போது ஒரு கருவி கேட்டால் இன்னொன்று எடுத்து கொடுத்தவுடன் கோபத்தில் சென்னியில் ஒரு அடி கொடுத்துள்ளார்.  அவனுக்கு சுரீர் என கோபம் வந்து விட்டது. டாக்டரிடம் ஏதும் சொல்லி கொள்ளாது வீட்டிற்க்கு சென்று விட்டான்.  மறுபடியும் இரண்டு நாள் கடந்து வேலைக்கு வந்த  போது டாக்டரும் கொஞ்சம் திட்டி விட்டு வேலைக்கு மறுபடியும் எடுத்து கொண்டார்.


அவன் வேறு வழியல்லாது வேலைக்கு சேர்ந்தாலும் டாக்டரிடம்  மனதில் கோபமாக இருந்தது. டாக்டரும், அவர் நோயாளிகளிடம் வைத்து  இவனை தரக்குறைவாக திட்டுவது மனம் நோகவே செய்த்து. அவன் கோபத்தை தீர்த்து கொள்ள நண்பர்களிடம் சேர்ந்து குடித்து விட்டு டாக்டரையும் அவர் மனைவியையும் தரக்குறைவாக திட்டி தன் மனக் கவலையை தீர்த்து கொண்டான்.


ஒரு முறை டாக்டரின் பருவ வயது மகள்  ஆருஷியை மருத்துவ மனையில் வைத்து போது பார்த்துள்ளார். இப்போது குடித்தவுடன் டாக்டரை திட்டுவதற்க்கு பதிலாக அவன்  பேச்சு முழுக்க ஆருஷியை பற்றியே இருந்தது. 


பின்பு ஒரு செவிலியன் கிடைத்தவுடன் இவனை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார் ஆருஷியின் தந்தை. திடீர் என்று வேலை பறிக்க பட்டதால் அவன் திருமணவும் தள்ளி போய் விட்டது. அவன் காதலியும் உடன் திருமணம் வேண்டாம், ஒரு நிலையான வேலையாகட்டும் என கூறி விட்டாள். இருப்பினும் புக்கா சிங்கை சந்தித்தே வந்தான்.  இரவு நேரங்களில் அவன் , ஆருஷீயின் பெற்றோரின் நண்பர்கள் வீட்டில் வேலைக்கு இருந்த அவன் நண்பர்களுடன்  சேர்ந்து குடித்து கும்மாளம் இட்டு தன் கவலையை தீர்த்து கொண்டான். இவர்கள் வேலை பார்க்கும் வீட்டிலுள்ள எஜமானர்களின் பிள்ளைகளை பற்றியும் அவர்களின் தகாத உறவுகளை பற்றிமே பேசி சிரித்து கொண்டனர்.  ஆருஷியை பற்றிய பேச்சு கொஞ்சம் அதிகமாகவே ஓடியது. அவர்களுக்கு  அவளுடைய பேச்சு, உடை நடை மட்டுமல்ல உடல் அமைப்பை பற்றியும் கூட கேலி பேசி கொண்டிருந்தனர். 


டாக்டர் வீட்டிலுள்ள பிராந்தியை  இளைஞர்களுடன் பங்கிட்டு நட்பை மேன்ப்படுத்தி தானும் ஒரு இளைஞன்  போல் எண்ணி கொண்டு ஆட்டம் போட்டு வந்துள்ளான் புக்கா சிங்கும்.  ஆருஷி அவனிடம் கேட்கும் சில பேச்சுக்கள் கூட இவர்கள் மத்தியில் கேலி பேச்சாக இருந்துள்ளது.  
அன்றும் ஆருஷி புக்காஜியிடம் பூரியும் உருளை குழங்கு குறுமா கேட்டுள்ளாள். அவளுக்கு உணவு பரிமாறி விட்டு பாத்திரத்தை சுத்தம் செய்து கொண்டு இருக்கும் போது அவள் பெற்றோர் வந்துள்ளனர். அவளுடைய அப்பா அவளுக்கு ஒரு புகைப்பட கருவி வாங்கி வந்துள்ளார்  இந்த வருட பிறந்த நாளுக்கு என. ஆருஷி சில புகைப்படங்கள் அவள் பெற்றோர்களை எடுத்து , மகிழ்ச்சியாக அவர்களிடம் பேசி கொண்டு இருந்து விட்டு தூங்க சென்றுள்ளாள்.  புக்கா சிங்கும் ஆருஷீ பெற்றோருக்கு உணவை கொடுத்துள்ளான். ஆருஷி அப்பா என்றும் குடிக்கும் பிராந்தியை எடுத்து கொடுக்க கூறியுள்ளார். ஆருஷி அம்மாவும் என்றும் போல் தன் பங்கு பிராந்தியையும் குடித்து விட்டு தூங்க சென்று விட்டார்.


புக்கா சிங் தூங்க  என மாடிக்கு சென்று விட்டான்.  12 மணிவாக்கில் அவன் நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்து விட்டனர்.  அப்போது அவர்களுடைய மூளையில் பூதம் வேலை செய்ய ஆரம்பித்தது. புக்கா சிங்குக்கு அளவுக்கு மீறி பிராந்தி  கொடுத்தனர்.  பின்பு  அவர்கள்   வீட்டுக்குள் வந்து ஆருஷி அறைக்கு சென்று அவளை  மானபங்க படுத்தும் நோக்குடன் நுழைந்துள்ளனர். தள்ளாடி வந்து புக்கா சிங் தடுத்துள்ளான்.  அதற்க்குள் ஆருஷியும் தூக்கத்தில் இருந்து விழித்து கத்தியுள்ளாள்.  குளிரூட்டபட்ட அறை என்பதால் சத்தமும் வெளிவரவில்லை. ஆருஷி காட்டி கொடுத்து விடுவாள் என பயந்து அவளை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு வேலைக்காரன் புக்கா சிங்கையும் மாடிக்கு இழுத்து சென்று கொன்று விட்டு ஓடி விட்டனர்.

ஆருஷி அம்மா இப்போது தான் வருந்தினாள்.  வேலை, பணம் என்று இருந்து தன் ஒரே மகளை பலி கொடுத்து விட்டேனே என அழுதாள் தன் பொறுபற்ற  செயலை நினைத்து. தன் குழந்தை காத்திருந்த நாட்களில் தனக்கு பேச நேரமில்லாதிருந்தது.  இன்றோ தன் குழந்தையும் போய் விட்டது என எண்ணி எண்ணி அழுதார்!!!

( போலிஸ் ஒரு கதையும் ஊடகம் சில கதைகளும், புலனாய்வுத் துறை வேறு விதமாகவும் கதைக்கின்றது. என் பங்குக்கு ஒரு புலனாய்வு சேவையும் செய்துளேன். உங்கள் புலனாய்வு கருத்துக்களும்  சொல்லுங்களேன்.)

6 Feb 2011

குடியரசு தலைவர் உரை!


 என் அருமை குடிமக்களே 62 வது குடியரசு தினத்தில் உங்கள் அனைவருடன் கதைக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நாட்களில் மட்டுமே பேச அனுமதி கிடைக்கின்றது. ஆகயால் மனம் திறந்து உங்களிடம் பேச வந்துள்ளேன். என் உதவியாளர்  My fellow citizen என்ற தலைப்பில் எழுதி  தந்த உரையே குப்பையில் போட்டு விட்டு, மழலை பள்ளி மாணவர் போல் பார்த்து வாசிக்க கூடாது என்ற உறுதியில்  உங்கள் முகம் நோக்கி பேச வேண்டும் என வந்துள்ளேன்.


 நம் நாடு சுதந்திரம் அடைந்து வல்லரசு ஆக போகின்றேம் என்று பீற்றி கொண்டாலும் 80 % மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் தான் உள்ளார்கள் என எண்ணும் போது கவலையாக தான் உள்ளது. 2008 ல் நான் பேச வந்த போது விட ஊழல், லஞ்சம் பெருகியுள்ளதை அறிவேன். மத்திய அரசு, மாநில அரசு என பாகுபாடு இல்லாது “ஊழலே எங்கள் கொள்கை” என  தலைவர்களும், அரசு அதிகாரிகளும் களம் இறங்கி இருப்பதை எண்ணி வருந்துகின்றேன். ஸ்பெக்ரம் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடி ஊழல், ஆசிய விளையாட்டு ஊழல் என எங்கு பார்த்தாலும் ஊழல் என்பதை என்னால் ஜீர்னித்து கொள்ளவே இயலவில்லை.  நான் கூட 3 படை அதிகாரிகள், என் குடும்பத்தார்கள் என  கோயில் குளம் போய் வந்தும் பலன் இல்லையே என எண்ணும் போது என்னையே வருந்தி கொள்கின்றேன். ஆகையால் பணி ஓய்வுக்கு பின்பு கிடைக்கும் மாதம் 50 ஆயிரம் ஓய்வு ஊதியம்  வேண்டாம் என சொல்லி விட்டேன்.


அரசியல் அமைப்பு சட்டம், நாட்டு நலன், ஒருமைப்பாடு என்ற பெயரில் மக்களின் கருத்து சுதந்திரதை நெரிப்பதை நிர்த்தி கொள்ள வேண்டும்!  ‘மக்கள் கருத்து சுதந்திரம்’ என்ற பெயரில் ஊடகங்கள் நடத்தும் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளை புரக்கணிக்குமாறும் கேட்டு கொள்கின்றேன். மக்கள் துன்பத்திற்க்குள்ளாகும்  விலைவாசி ஏற்றம், கள்ள சந்தையால் வெங்காயம் விலை கூடியது பற்றி விவாதிக்காது கணவர் மனைவிக்குள் சண்டை மூட்டி விடுவதும், தனி குடும்பமா கூட்டு  குடும்பமா என குடும்பத்தை பிரிப்பதும் சொட்ட தலை வழுக்க தலை என பேசி மக்களை அவமானப்படுத்துவதும், கல்லூரி மாணவி மாணவர்களை  படிப்பு, வேலை விடுத்து ஆக்கம் கெட்ட கேழ்வி கேட்டு குழப்பி கொண்டிருக்கும்  கோபி நாத் தலைமையில் கச்சேரி நடத்துபவர்களை அந்தமானுக்கு கடத்த சட்டம் தீட்ட வேண்டும்.


மேலும் மானாட மயிலாட என்ற ஆட்டத்தை குடும்பத்துடன்  பார்த்து ஜொள்ளுவிடும் தமிழக கலாச்சாரம்  பற்றி ஆராயவும் உத்தரவு இட்டுள்ளேன்.  நடந்து என்ன, குற்றம் என்ற பெயரில் பேய் கதைகள் பரப்பும் சேனலுகளையும் ஒழிக்க திட்டம் இட்டுள்ளேன். பழைய அரச சபையிலுள்ள கவிஞசர்கள் போல் புகழ்மாலை- கவிஞசர் வாலி போன்றோரை  பேணாவை  இல்லாத காட்டில் கடத்தவேண்டும்! இந்த வருடம் தமன்னா அனுஷ்காவுக்கு கொடுத்த கலைமாமணி விருதுவிலும் ஊழல் உள்ளதாக  கேள்வி பட்டதால் விசாரணை  நடத்த திட்டம் இட்டுள்ளேன். மச்சான் நடிகை நமிதாவுக்கு அடுத்த வருட   விருது புக் செய்த்தாகவும் கேள்விப்பட்டேன்.


அடிப்படை தேவையை நிவர்த்தி செய்ய வக்கில்லாத அரசு ஏன் விண் வெளிக்கு  ராக்கட் செலுத்தி பணத்தை கரியாக்குகின்றது என்ற கேள்வி என்னில் எழாதில்லை. கடை வீதியிலும் வீட்டு முற்றத்திலும் ஓடும் சாக்கடையை சுத்தம் செய்ய வழியற்ற நமக்கு நிலாவில் வசிக்க ஆசை  வரலாமா? நிறைய கேள்வி கேட்க துவங்கினால் என் பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்ற எச்சரிக்கை என்னை மௌனிக்க செய்கின்றது. 


மேலும் தமிழக பெண்களை சுய உதவி குழு என்ற பெயரில் வட்டி முதலாளிகளாகவும் பெண் தாதாக்களாகவும் உருவாக்குவதாகவும் செய்தி வந்துள்ளது. சீட் கிடைத்தால் இந்திய ஒருமைப்பாடு, இல்லை என்றால் தனி நாடு கோரிக்கை என பண்பற்ற  அரசியல் நடத்தி வரும் அரசியல்வாதிகள், மக்களுக்கு 1 ரூபாய்க்கு மோசமான அரிசி 80 ரூபாய்க்கு வெங்காயம் என ஏமாற்று அரசியல்  நடத்துவதும், செம்மொழி என  கூறி கொண்டே தமிழை சென்னை தமிழ், அமெரிக்க தமிழ் என தமிழை அழிப்பதும் தெரிந்ததே!


இருப்பினும் இந்த கொடிய செயல்களுக்கு முடிவுகட்டுவது உங்கள் கையில் தான் உள்ளது. ஏனெனில் நான் வகிப்பது வெறும் அலங்காரப் பதவி தான் என்பது உங்கள் யாவருக்கும் தெரிந்ததே.  


போராளிகள் என்ற பெயரில் நம் அண்டை நாட்டவரான ஈழ தமிழர்களை கொல்ல வழி சொல்லி கொடுத்த நாம், நம்  சொந்த மக்களான ஏழைகளை நக்சல்கள் என கூறி பழி தீர்த்து கொள்வதை என்னால் ஏற்று கொள்ள இயலவில்லை.
 
நம் நாட்டை, டாடா, ரிலயன்ஸ் போன்ற பணம் முதலைகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். முதன்மையாக முதுகு தண்டுவடம் அற்ற உபதேசி- பிரதமரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.  நாட்டு பற்ற அற்ற சோனியா ராகுலிடம் நம்பிக்கை கொள்ள வேண்டாம்.  ஒருவன் ஒரு முறையே தேர்தலில் போட்டியிட முடியும் என சட்டம் திருத்தவேண்டும். பள்ளி கல்லூரிகளை பொது உடமையாக்குவோம்.

வீட்டுக்கு வீடு செடி நட உற்சாகப்படுத்த வேண்டும். பச்சை புரட்சி என கூறி மண்ணையும் மக்களையும் கான்சர் போன்ற கொடிய நோய் தாக்க காரணம் இனி ஆகலாகது. குடிசை இல்லாத நாட்டை உருவாக்குவோம் எனக் கூறி குடிசை மக்களை ஊரை விட்டு துரத்தும் அவலத்தையும் களைய வேண்டும்.


நம் நாடு தன் நிறைவு அடைந்து விட்டது வல்லரசு ஆகி விட்டது என என்னால் பொய் சொல்ல இயலாது . சுதந்திரமான இந்திய, குடியரசு இந்தியா என்ற பெயரில் நம் நாட்டில் நிகழும் கொடிய செயல்கள் ஒழிந்து உண்மையான மக்களாட்சி மலரட்டும் என்று ஆசி கூறி விடை பெறுகின்றேன். எகிப்து போன்று மக்கள் புரட்சி வெடிக்கும் முன் பதவியை விலக வேண்டும் என்ற ஆசையுடன் உங்களிடம் விடை பெற்று கொள்கின்றேன்.
ஜெய் ஹிந்த்!!!!!!! 

4 Feb 2011

இளைஞர்கள் தற்கொலையும் காதலும்……………..


ஒவ்வொரு 4 மணி துளிகளிலும் ஒரு தற்கொலை நிகழ்வதாக தேசிய குற்றம் அறிக்கை சொல்கின்றது. இதில் 69 % பேர் 15- 40 வயதிற்க்கு மத்தியிலுள்ள இளைஞசர்களே. கடந்த வருடம் தற்கொலையால் 1 லட்சத்து, 27 ஆயிரத்து 151 பேர் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.  இதில் தென் இந்தியாவே சேர்ந்த கேரளா, தமிழக, கர்னாடக ஆந்திராவே சேர்ந்தவர்கள்    வருடத்திற்க்கு  50 ஆயிரத்திற்க்கு மேல் சாகின்றனர். மேலும் 32% பேர், கல்வியறிவில் முந்தியுள்ள கேரளத்தவர்களே! இன்னும் ஆச்சரியமான விஷயம் கல்வியறிவில் பின் தங்கியுள்ள பீகார் போன்ற மாநிலங்களில் தற்கொலை எண்ணிக்கை 2 % மட்டுமே !

பலபோதும் தற்கொலைக்கு, காதலும் அதை தொடர்ந்த சில பிரச்சைனைகளும் காரணமாகி விடுகின்றது.  சமீப காலமாக இளைஞர்கள் பார்த்தவுடன் காதல் என பல பிரச்சனைகளுக்கு ஆளாகுன்றனர்.

காதல் வருவது சினிமாவில் காட்டுவது போல வினோதமாகவே உள்ளது. எனக்கு தெரிந்த ஒரு பெண் அவளின் சித்திக்கு வந்த  தொலைபேசி அழைப்புக்கு பதில் கொடுத்துள்ளாள். பேசும் நபரின் சத்தம் இனிமையாகவும் பெயர் ‘அஜித்’ என்று இருந்ததாலும் காதல் வந்து விட்டதாம்.

9 வருடம் முன்பு அப்போது தான் “காதலுக்கு மரியாதை’ படம் வந்த நேரம். அப்படத்தின் கதாநாயகன் போலவே தன் காதலனும் இருப்பான் என எண்ணி வசதி வாய்ப்பான வீட்டில் பிறந்து வளர்ந்த, மெட்ரிகுலேஷன் பள்ளி படிப்பு பெற்ற ஒரு பெண் தன் வீட்டின் பணியாளர்கள் போல் இருந்தவர்களின் பையனுடன் வந்து விட்டாள்.  பையனின் அக்கா சந்தனம் இட்டு அம்மா குங்குமம் வைத்து வாழ்த்தி; வீட்டிலுள்ள எல்லோர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பெண்ணை கடத்தி வர சென்றுள்ளான் அவன்! இதை காதல் என்பதை விட திட்டமிட்ட பெண் கடத்தல் என்றே கூற இயலும்.

சாதி ஒழிப்பு கூட்டத்தில் ஒருவர் இவ்வாறாக பேசினார். அவர் முதுகலை பட்டத்திற்க்கு சேர்ந்ததே உயர் ஜாதி பெண்ணை காதல் புரிந்து மணக்க வேண்டும் என்றாம். அவ்வாறே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் புரிந்துள்ளார் என்றும் பெருமையுடன் கூறினார். இதில் கொள்கை இருந்தாலும் காதல் இருப்பதாகவும் தெரியவில்லை.

அதே போல் சமீபத்தில் அறிமுகமான ஒரு கல்லூரி மாணவி உயர் அரசு பதவியில் இருப்பவரின் மகள். 18  வயது வந்த உடனே பக்கத்துவிட்டு பையனின் பெற்றோர் உதவியுடன் ரஜிஸ்தர் திருமணம் புரிந்து கொண்டு பெற்றோர் வீட்டிலிருந்தே முதுகலை பட்டமும் பெற்று விட்டாள். எடுத்த தீருமானம் சரி தானா என்று இன்று கலங்கினாலும் தப்பி வர இயலாது  மனக்குழப்பத்தில் உள்ளார்.

மனித வாழ்வில் இனிமையான இளைமைப் பருவம் கூட இவர்களை பொறுத்தவரை பாரமாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 3 வருடமாக இளம் மாணவர்களுடன் பயணிப்பது அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிட்டியது. பலர் கர்ண குண்டலம் என்பது போல் அலை பேசியுடனே வாழ்ந்து வருகின்றனர். ஒரே நாளில் 100 க்கு மேல் SMS, அலைபேசி கதைப்பு என நாட்களை கடத்தி செல்கின்றனர். என் பயணம் 1 மணி நேரம் என்பதால் பல பொழுதும்  அவர்கள் பேசுவதை ஒட்டு  கேட்க பட்டேன்!. முதலில் சிரித்து பேசி பின்பு போடா நாயே என்று அன்பு மழை பொழிந்து பின்பு சண்டையிட்டு கண்ணீர் வடித்து பல்கலைகழகம் வந்து சேர்வார்கள். ஒரு மணிநேரம் தொடர்ந்து அலைபேசி வழியாக கதைப்பவர்களும் உண்டு. அவர்கள் குடும்பம் அவர்கள் குணம் ,பின் புலன் என எல்லாமே ஒரு பயணத்தில் அடுத்து, இருப்பது வழியாகவே தெரிந்து கொள்ளலாம். இவர்களுக்கு சேவை செய்ய என்றே நண்பர்களும் உண்டு. பல வேளைகளில் ஓட்டுனர் தன் கவனத்தை  இவர்கள் பேச்சில் திருப்பி நமட்டு சிரிப்பில் வருவதை கண்டுள்ளேன்.  சுயமரியாதை, மதிப்பு என்பது இனி வரும் காலங்களில் பொருட்களுக்கு மட்டுமே என்றும் தோன்றாது இருந்தது இல்லை.

இதே இளைஞர்களிடம் எங்கள்  பயிற்ச்சி பத்திரிக்கை செய்திக்கு என வினா எழுப்பினால்  பதில் சொல்லாது  நழுவி விடுவார்கள். பார்க்க பெரிய அறிவாளிகளாக காட்டி கொண்டாலும் ஆழமான கருத்தாக்கம் சிந்தனை வளம் இருப்பது இல்லை; வளர்க்க முயல்வதும் இல்லை  என்றே உணர இயலும். ஒரு விதமான பந்தா கொண்டே காலம் கழிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.. எப்போதும் ஒலி எழுப்பிகளாகவே இருந்து வருகின்றனர்.

காதலை ஒரு உண்மையான நோக்கில் இன்று பல இளைஞர்கள் அணுகவது இல்லை என்பதே உண்மை. காதலிக்கும் போதே உடை, பொருட்கள் என வாங்கி கொள்ள பல பெண்கள் தயாராக உள்ளனர். பல  பெற்றோர்கள் கூட இதை பொருள் ஈட்டும் வாய்ப்பாக எடுத்து கொள்கின்றனர்.

ஊடகம் கூட காதல், பெண் ஆண் உறவுக்கு அசாதாரணமான பல அர்த்தங்களை கற்பித்து பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றது. படிக்கும் போதுள்ள காதல் ஏதோ இன்றிமயையாதது போன்று தோற்றம் உருவாக்குகின்றனர். படிக்கும் தருவாயில் காதல் விட நட்பே  நன்மை பயிற்க்கின்றது என்பதை மறந்து போகின்றனர் பல பொழுதும்.


 எங்கள் ஒரு பேராசிரியர், சில மாணவி மாணவர்களை  உடை நடையை கவனித்து கலாயிப்பார்.  வாய்ப்பு கிட்டிய போது அவரிடம் ஒரு கேள்வி வைத்தோம். உங்களுக்கு பள்ளி, கல்லூரி காதல் வந்துள்ளதா என. அவரின் வார்த்தை ரொம்ப  சிந்திக்கவே வைத்தது.  படிப்பு, பண தட்டுபாடு மத்தியில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்  என்ற சூழலில் இருந்ததால் படித்து ஒரு வேலை,  நல்ல வாழ்க்கை என்று மட்டுமே இருந்ததால் காதலுக்கு என நேரம் இல்லாது இருந்தது என கூறினார். இப்போது  மாணவர்கள் பெரும் பகுதி நேரம் ஆக்கபூர்வமான செயலுக்கு என்பதை விட வெட்டி பேச்சு, பார்ட்டி என செலவிடுகின்றனர். 

மேலும்  முன் நாட்கள் போல் பெற்றோர்களுடனும் ஒரு உணர்வு பூர்வமான உறவு பேணுவதும் குறைந்துள்ளது. சமூக சூழல் காரணமாக வசதி வாய்ப்பாக வாழ வேண்டிய சூழலில்;  ஆசையில் பெற்றோர் இருவரும் வேலை என அதி காலையில் ஓட துவங்கி இரவு தான் பல வீடுகளில் வந்து சேருகின்றனர்.  பிள்ளைகளுக்கு தன் உணர்வுகளை பகிந்து கொள்ள வெளி உலகம் தேடுகின்றனர்.  இதன் தாக்கம் அவர்கள் வாழ் நாள் முழுக்க அனுபவிக்க நேரிடுகின்றது. ஒரு போதும் தீர்வு காண இயலாத வண்ணம் பிரச்சனைகளின் சங்கிலி தொடரில் அவர்கள் மாட்டி கொள்கின்றார்கள்.

இருப்பினும் எவ்வாறாக தங்களை அபாயப்படுத்தி கொள்ளாது தப்பித்து வாழ்வது என்று அவர்களே  வழி காண முன் வர வேண்டும். இளைமைப் பருவத்தை கொண்டாட்டங்களுடன், மனதை பண் படுத்தி வாழ்க்கையை வளமாக்க பயன்படும் காலம். அல்லாது உணர்வுகள், ஆசைகளின் அடிமை நாட்கள் அல்ல!!