20 Jan 2011

மரணம் கொண்டு வந்த சில சிந்தனைகள்!!!


  பிறப்பது எங்கு, எப்போது, யாருக்கு, என்று அறியாதிருப்பது போல் மரணவும் புதிராகவே உள்ளது.

உயிர் இருக்கும் வரை பைபிளும் வெத்தலை பெட்டியுமாக இருந்த பாட்டி இறக்கும் தருவாயில் உயிர் ஊடலாடிய வாயில் பாலை ஊற்றி கொண்டே "அம்மா, உங்களை எங்கு அடக்கம் செய்ய வேண்டும்" என கேட்ட போது அய்யாவிடம் கேட்டு கொள்ளுங்கள் என கூறி உயிரை விட்டார். அவர் பெற்றோர், சகோதரர்களுக்கு 385 மைலுக்கு அப்பால் ஆனால் பாட்டியோ கேரளாவில் தாத்தாவின் தோட்டத்தின் ஒரு கரையில் அடக்கம் செய்யபட்டார். 

தாத்தா 50 வருடங்களாக கேரளாவில் வாழ்க்கையை திருவிழா போன்று கொண்டாடி வாழ்ந்தவர். நிழலுக்கு கூட கோயில் பக்கம் ஒதுங்காதவர். சொந்த ஊரில் துயில் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அவர் பிறந்த ஊர் அழகம்பாறையருகில்  தான் உயிரோடு இருக்கும் போதே ஒரு வீடு கட்டி அதன் அருகில் கல்லறையும் கட்டி வைத்திருதார். 50 வருடம் முன்பு கண்ட உறவுகள் அல்ல தற்போது என கண்ட போது மறுபடியும் கேரளா நோக்கியே வந்து விட்டார். தாத்தா யாருக்கும் அன்பால் கூட கட்டுபடாது நானே ராஜா நானே மந்திரி என குடி, கூத்தோடு அவர் 95 வயதிலும் இன்பமாக வாழ்ந்தவர். திடீர் என ஒரு நாள் பக்க வாதத்தால் பாதிக்கபட்டு சரிந்து; அவர் ஆசையாய் நம்பிய மகனும் அவரை பாசமுடன் நோக்கவில்லை, அவர் கேலி பேசி விரட்டிய மகன்களும் கைவெடிந்த நிலையில் ஒரு நாள் இறந்தார். சகல கிருஸ்தவ மரியாதையுடன், பாதிரியாரின் ஜெபத்துடன் அவரை பாட்டியின் பக்கமே அடக்கம் செய்தனர். 

மரணத்தை பற்றி ஒரு போதும் நினையாத, தாத்தாவின் மரணத்தை கேலி பேசிய பெரியப்பாவும் இடி விழுந்து அடுத்த வருடமே கல்லறை சென்றார். பெரியப்பாவுக்கு 5 ஏக்கர் மேல் இடம் இருந்தும் அவர் மகன்கள் தாத்தா, பாட்டி பக்கம் இடம் தர கேட்டனர். அது அவர்களுக்கு ஒரு மான பிரச்சனையாகவும் இருந்தது.  காதல் திருமணம் செய்து கொண்டார் என்ற ஒரே காரணத்திற்க்காக 40 வருடங்களுக்கு மேல் பெரியப்பா கால் படாது தடுத்திருந்த குடும்ப தோட்டத்தில் பெரியப்பாவில் உயிர் இல்லாத உடலையாவது அடக்கம் செய்து விட வேண்டுமென துடித்தனர் மகன்கள். சித்தப்பவோ, இதை சாக்காக வைத்து சொத்து கேட்டு வந்து விடுவார்கள் என கருதி இடம் தர மறுத்து விட்டார்! 

அடுத்த வருடம் மே மாதம் இளைய சித்தப்பா அவர் மகள் திருமணம் முடிந்து 5 வது நாள் தனது 44 வது வயதில் கல்லறையை தேடி போய் விட்டார்.  பணம் சேர்க்க கருத்தாக இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவருக்கு நல்ல நாளாகவே இருந்தது சித்தப்பாவுக்கு.  அன்று மாலை சித்தப்பாவை ஒரு பாயில் கட்டி கொண்டு வந்தார்கள் மருத்துவமனையில் இருந்து. நாங்கள் உறவினர்கள் அழ தெரியாது  நின்ற போது ஊர்காரர்கள் ஒப்பாரியிட்டு அழுது உருண்டனர். சித்தப்பா இறந்த போது அழுது காணப்படாத அப்பாவும், அழுததை அன்று கண்டேன். அத்தைமார்கள் எறிகின்றவன் கையில் ஆண்வர் கல்லை கொடுக்கவில்லையே என ஏங்கி ஏங்கி அழுதனர். இறந்த பின்பு பல நாட்கள் சித்தப்பா எங்கள் வீட்டுக்கு வந்துகொண்டே இருந்தார் என் கனவில்! 

ரஞ்சனி என்ற ஒரு தோழி எங்களுடன் 8 ம் வகுப்பில் படித்தாள். அவள் வெகுதூரமுள்ள காட்டு பகுதியில் இருந்து பள்ளிக்கு வருகின்றாள் என்று மட்டும் தெரியும். எப்போதும் சிரித்த வெளிறிய முகத்துடன் காணப்படும் அவள் முடி நூடில்ஸ் போன்று சுருண்டு இருந்தது. அவளுடைய உடை கூட அவளுடைய மெலிந்த தேகத்தை ஒட்டியே இருந்தது. ஒரு நாள் செய்தி வந்தது கரையில்லாத கிணற்றில் தண்ணீர் எடுக்க போன போது கால் வழுதி விழுந்து செத்து விட்டாள் என்று. 
ஜெயா என்ற தோழி எங்களுடன் படித்தாள். அவள்  சுழன்று வரும் ஒரு பெண் ஜாக்கி ஜான் போல் இருந்தாள். அவளை கண்டால் எங்கள் வகுப்பு மாணவர்கள் கூட பயந்து நடுங்கி ஓடுவார்கள். அவளுக்கு 18 வயதுள்ள போது  அவளுடைய இரு அக்காகள் , 10வது வகுப்பில் படிக்கும் ஒரு தங்கை என 4 பேரும் தங்கள் இடுப்பில் கல்லை கட்டி குளத்தில் தாவி தற்கொலை செய்துகொண்டனர்.

ஹரிகரன் சார் எங்களுக்கு 7 வது வகுப்பு கணித ஆசிரியராக இருந்தார். அவருக்கு இரு மகன்கள் இருந்தனர். என்னை அவருடைய மகளை போன்றே நேசித்தார். எங்கள் பகுதி குளிர் பிரதேசமாக இருந்ததால் எப்போதும் மழை அல்லது குளிர் இருந்து கொண்டே இருக்கும். நான் குளிருக்கு அணியும் ஸ்வறருடைனே பள்ளிக்கு தினம் செல்வேன். வெயில் அடித்தால் கூட எனக்கு குளிராகவே தெரியும். இப்படி சுகம் கேட்டால் வாழ்கையில் முன்னேற முடியாது என கூறி  பிரம்பால் எனக்கு அடிவிழும். ஒரு முறை என் அம்மாவிடம் உங்கள் மகளை மலையாளிக்கு தான் மணம் முடித்து கொடுக்க வேண்டும் என அறிவுரை கூறினார். அந்த வருடம் எங்கள் பள்ளியின் நடந்த மாவட்ட அளவு போட்டியில் மோகினியாட்டம் என்ற நடனத்தில் பங்கு பெற்றிருந்தேன். என் நடன நிகழ்ச்சியை ரசித்து கைதட்டி உற்சாகபடுத்தினார். அடுத்த வருடம் 8 வகுப்புக்கு என நாங்கள் உயர்நிலை பள்ளியில் படித்து கொண்டிருந்த போது ஹரிகரன் சார் மஞ்சகாமாலை நோயால் இறந்து விட்டார் அதுவும் என்னுடைய பிறந்த நாளாக இருந்தது. என்னை ஒரு ஆசிரியர் என்பதையும் கடந்து பெற்றோரை விட நேசித்த என் ஆசிரியரின் நினைவு ஒவ்வொரு பிறந்த நாளும் என்னை தேடி வரும். 

இப்படியாக ஒவ்வொரு மரணமும் வேதனை மட்டுமல்ல வாழ்க்கையை பற்றி வேறு சில சிந்தனைகளையும் தந்தது.

 

 

 

9 comments:

  1. பகிர்விற்கு நன்றிகள்

    ReplyDelete
  2. சிறந்த பதிவு நன்றிகள்
    நம்மளுக்கும் வோட்டு போடுங்க

    ReplyDelete
  3. மிக்க நன்றி நண்பர் ராம்ஜி அவர்களே மற்றும் நண்பர் நிதர்சனன்!!

    ReplyDelete
  4. உங்கள் மொழி ஆளுமை நன்றாக இருக்கிறது.புனைவெழுத முயற்சிக்கலாமே...

    ReplyDelete
  5. போகன் அவர்களே உண்மையில் ஆச்சரியம் மட்டுமல்ல தன்னம்பிக்கையும் கொடுத்தது உங்கள் மறுஇடுகை. காலம் கனியட்டும்! சரிதானே?

    ReplyDelete
  6. வழமை போல் சிறப்பு..

    மரணம் நம்மை மனிதனாக்கும்

    ReplyDelete
  7. தங்களது மேலான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  8. நன்றாக இருந்தது.

    ReplyDelete
  9. I love your flow in writing. keep it up.

    ReplyDelete