15 Jan 2011

விபத்து யாரால்? சவாலான சபரிமலை பயணம்!


துயரான நாளாகி விட்டது !   எனது பிறந்த ஊர் வண்டிபெரியார் அருகில் நடந்த மிக கொடுமையான விபத்து செய்தியே அது.  இன்று இரவு 8.30 மணிக்கு நடந்துள்ளது,100 பேருக்கு மேல் இறந்ததாகவும் அறிவித்துள்ளனர்.   ஒரு ஜீப் ஆட்கள் கூட்டத்தில் புகுந்ததால் மக்கள் நெரிசலில் சிக்கி இறந்ததாகவும் கூறியுள்ளனர்.

ஐயப்பா சாமிமார்  சீசன் மிகவும் மகிழ்ச்சியளிக்கும்  எங்கள் பகுதி மக்களுக்கு. அங்கு வசிக்கும் மக்கள் ஒரு எதிர் பார்ப்புடனே ஒவ்வொரு வருடவும் எதிர்நோக்கி காத்திருப்போம் இச்சீஸனை. ஏன் என்றால்   எங்கள் பகுதி மக்கள் பல விதத்தில் வருமானம் தருவது தான்!  எங்கள் பகுதி மலை பிரதேசம் என்பதால் எப்போதும் ஆள் அரவம் அற்றே இருக்கும். மூணார் போன்று உல்லாச பயணிகளின் சொர்கபுரியாகவும் விளம்பரம் பெற்று  இருந்ததில்லை.   சில வெள்ளகாரர்கள் மட்டுமே எங்கள் பிரதேசத்திற்க்கு வருவர்.  அருகில் இருக்கும் தமிழகம் சேர்ந்த பயணிகள் கூட தேக்கடி வரை வந்து விட்டு திரும்பி விடுவர். 

சபரிமலை பயனம் மேற்கொள்ளும் போது எருமேலி வழியை தேர்வு செய்யாத சாமியார்கள் தான் எங்கள் பகுதியே தேர்வு செய்வர் தங்கள் பயணத்திற்கு என . உணவில் இருந்து தலைக்கு தேய்க்கும் எண்ணை, சோப்பு அவர்கள் விரும்பும் குருமிளகு, தேயிலை, ஏலகாய்  விற்கும் கடைகள் இந்த சீசனில் காளான் செடிபோல் முளைத்து வரும்.  இதிலும் 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் ஜீப் ஜீப் என கூவி அழைத்து பயணிகளை ஏற்றி செல்லும் சாரதிகள் சாமிமார் சீஸனில் கொண்டாட்டம் தான். ஒரு ஜீப்புள்ளவன் 2 ஜீப் வாங்கும் அளவுக்கு சம்பாதித்து விடுவார்கள். அதுவரை விற்ற பொருட்கள் எல்லாம் பதின் மடங்கு லாபத்தில் விற்பனை நடத்து கொண்டு இருக்கும். , பக்தி என குமியும் தமிழகம், ஆந்திரா, கர்னாடகா சாமிகள் எங்கள் பொருள் வாங்க வந்த வாடிக்கையாளர்களாகவே தெரிவார்கள் எங்கள் பகுதி மக்களுக்கு!

எல்லா வருடமும் ஒரு சாமியாராவது எங்கள் பெரியார் நதியால் காவு வாங்கபடுவார். அழகான நதியில் குளிக்க இறங்கும் சாமிகள் வெளியூர் என்பதால் தண்ணீரிலுள்ள சுழியை தெரிந்து கொள்ள தவறி விடுவர்.  உள்ளூர் மக்கள் நதியில் முனி இருப்பதாகவும் காலைபிடித்து இழுத்து ஆழத்திற்கு இழுத்து விடுவதாகவும் கதைப்பதை கேட்டுள்ளோம். 

இருப்பினும் இன்று வரை இது போல் கொடூரமான விபத்து நிகழ்ந்ததாக கேள்வி பட்டதில்லை . ஒரு முறை தமிழக சாமிமார் வந்து திரும்பிய பேருந்து குமளிக்கும் லோயர்கேம்புக்கும் இடையிலுள்ள பாதாளத்தில் விழுந்து பேருந்தில் இருந்த பெரும் பகுதி சாமியார்கள் இறந்துள்ளனர். அதே போல் ஒரு முறை பக்தர்களின் காணிக்கையான தேங்காய்-நெய் கொண்டு எரியும் தீயில் விழுந்து சில பக்தர்கள் மரணத்தை சென்றடைந்துள்ளனர்.

இன்று விபத்து நடந்த பகுதி மின் விளக்குகள் இல்லாததும், தற்காப்பு வசதியற்ற, சிறப்பாக காவல்துறை உதவி அற்ற பகுதியாகவே இருந்துள்ளது. இதிலும் எடுத்துகொள்ள படவேண்டியது மகர ஜோதிக்கென 2 லட்சம் சாமியார்கள் சங்கமித்திருக்கும் இடத்தில் ஒரு ஆம்புலன்ஸ் தான் இருந்துள்ள தாம்? பொதுவாக எங்கள் பகுதியின் தரமான மருத்துவ வசதி கூட இல்லை. எப்போதும் 3 மணிநேரம் பயணம் சென்று கோட்டயம் என்ற பட்டணத்தை நோக்கியே செல்ல வேண்டியுள்ளது. மேலும் நெளிவும் குறுகலுமான ரோடு வழியுள்ள பயணம் எப்போதும் சவாலானதே!


கடந்த ஒரு மாதமாக கேரளா ஊடகம் ஏஷிய நெட், அமிர்தா தொலைகாட்சிகள் போன்றவை ரோட்டின் நிலைபற்றியும் , சாமியார்களுக்கு செய்து கொடுக்கப்படவேண்டிய வசதிகளின் குறைபாடுகளை பற்றியும் கதறி சொல்லிகொண்டு தான் இருந்தனர். இருந்தும் தேவையான பாதுகாப்பு வசதி கொடுக்காது கேரளா அரசு பல உயிர்களை பறித்து விட்டது. கேரளா அரசு வாய் சவுடாலில் முந்தும் அளவுக்கு செயலில் இல்லை என்பதே இது மறுபடியும் எடுத்து காட்டுகின்றது. 


தேவஸியம் போர்டு என்ற குழு தான் சபரிமலை பயணிகளுக்கு வேண்டிய வசதி செய்து கொடுக்க அரசால் நிறுவபட்ட சட்டபூர்வமான குழு. இவர்கள் சாமிகளுக்கு விற்கும் நைவேதியத்தில் இருந்தே ஊழலில் முங்கி நீச்சல் அடிப்பதை கடந்த சில நாட்களாக ஊடகம் சொல்லி கொண்டே தான் இருந்தது தமிழக ஊடகம் போல் அல்லாது ஆக்கபூர்வமான கருத்துரையாடல்கள் கொண்ட கேரளா ஊடகம், சாமிமார்கள் சிறப்பாக வெளிமாநில பக்தர்கள் எதிர் கொள்ளும் துயரம் பற்றி சொல்லி கொண்டே இருந்தும் அரசின் மெத்தன போக்கால் இவ்வளவு பெரிய விபத்துக்கு தளம்  அமைத்து கொடுத்து விட்டனர் என எண்ணும் போது அரசின் கையாலக தன்மையை எண்ணி சினம் கொள்ளாது   வேறு வழியில்லை.

கேரளாகாரர்கள் அறிவாளிகள் பழக இனிமையானவர்கள் பார்க்க அழகானவர்கள் என பல சிறப்பு இருந்தாலும் அவர்கள் மட்டும் கடவுளின் தேசத்தின் பிள்ளைகள் என்ற ஒரு அகங்காரவும் உண்டு.  மற்றவர்களின் துன்பத்தை கூட ஏதாவது தத்துவம் பேசி மழுப்பி விடுவார்கள்.

பூமி பந்தில் சிறப்பான, ஏன் கடவுள் அருகாமையுள்ள இடமாக சபரிமலை இருக்கலாம். ஒரு சீஸனில் மட்டும் 133 கோடி ரூபாய் லாபம் இட்டும் தலமாக உயர்ந்துள்ளது.  ஆனால் பக்தி என்ற பெயரில் ‘மகரஜோதி’ என்ற பெயரில் செய்யும் தில்லு முல்லு கணக்கில் எடுக்க தவறுகின்றனர் !  நான் பள்ளியில் 7 வது வகுப்பு படிக்கு வேளையில் காங்கிரஸ் ஆட்சி நாட்களில் கம்னிஸ்டுகள், ஊடகவியாளர்களையும் அழைத்து சென்று மகர ஜோதி என்ற மகா சம்பவத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தியுருந்தனர். தற்போது கேரளாவின் வருமானத்திற்க்கு பெரும் பங்கு இது சார்ந்த நம்பிக்கை வகிப்பதால் சிலவற்றை "கண்ணை மூடி பூனை பால் குடிப்பதுபோல்" இருந்து கொள்கின்றனர். பொதிகை தொலைகாட்சியில் உயிரைவிடுத்து தற்சமய ஒளிபரப்பில் சிலர் உணர்ச்சி வசபடுவதை காணும் போது அழுவதா சிரிப்பதா நாம் அறியாது நிற்கும் சூழலுக்கு தள்ளபடுகின்றோம். பக்தி சம்பந்தமான கருத்துக்கள் மற்றோர் மனதை பெரிதும் துன்பப்படுத்திவிடும் என எண்ணும் போது துணிவாக சில சம்பவங்களை சொல்லவும் ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும் நம் பாதுகாப்பு நம் கையில் மட்டும் அல்ல என உணரும் போது சில தற்காப்புக்கள் பக்த பயணம் மேற்கொள்ளுபவர்கள் எடுத்தல் நலமாக இருக்கும்.

மகரஜோதி அன்றே அங்கு இருக்க வேண்டும் என பிடிவாதம் கொள்ளாது கடவுளுக்கு உகுந்த விதத்தில் பக்தியான பயணமாக மேற்கொள்ள பக்தர்கள் முன் வர வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையின் மேலுள்ள பயணம், உலகில் உயரமான பிரதேசங்களின் மேலுள்ள பயணம் சுத்தமான காற்று, வெள்ளம், வனமத்தியிலுள்ள பயணம் என எல்லா விதத்திலும் ரசிச்சு மேற்கொள்ளும் பயணம் இனிதாகவும் முடிய வேண்டும்.

ஐய்யப்ப ஆலய தலைமை குருக்கள் சினிமா நடிகை ஜெயமாலாவுடன் சேர்ந்து அடித்த கோமாளி கூத்து நாம் தெரிந்தே. இந்த விபத்து சோகம் கூட பலரில் பல விதமாக பிரதிபலிப்பதை நாம் காண உள்ளோம். பழுத்த பக்கதர்கள் என சொல்லி கொள்பவர்கள் ஐய்யப்பா சாமிக்கு பிடிக்காத பெண்கள் வந்தது அல்லது அவருக்கு பிடித்தமான காடுகளை அழித்து சிமின்று கட்டிடம் கட்டியது என சொல்ல போகிறார்கள். கடவுள் இல்லை என கூறுபவர்கள் ஒரு படி மேலை போய் ஐய்யப்பனிடமே கேள்வி வைப்பார்கள். எதிர் கட்சியோ, ஆளும் கட்சியின் அசட்டுதனம் நாங்க இருந்தா எல்லாம் நல்லபடி சென்றிருக்கும் என கதை விடுவார்கள். பாதிக்க பட்ட குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு தாயும், மனைவியும், பெற்றோரும், குழந்தைகள் கடைசியாக தான் தெரிவார்கள் என்பதே துர்பாக்கியமான உண்மை!!!!

5 comments:

  1. though the accident took place in your native without hesitation you described the fact about makkara jothi and without hurting the sentiments of ayyappa bakthas how to carry out their sabariyathra. I appreciate your openness and courage to write so.

    ReplyDelete
  2. very interesting piece of information. Some amount of income may be portioned to the welfare and facilities of the sabarimala pilgrims.please write more on your place, tourist spots in ur blogs with fotos

    ReplyDelete
  3. மகரஜோதி அன்றே அங்கு இருக்க வேண்டும் என பிடிவாதம் கொள்ளாது கடவுளுக்கு உகுந்த விதத்தில் பக்தியான பயணமாக மேற்கொள்ள பக்தர்கள் முன் வர வேண்டும்.


    இதுதான் மிகச் சிறந்த நடைமுறைத் தீர்வு

    ReplyDelete
  4. தெரியாத பல செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது.

    ReplyDelete
  5. சரியான கட்டுரை. விரிவாகவும் அந்த மண் சார்ந்தும் இருந்தது.வாழ்த்துக்கள்

    ReplyDelete