header-photo

என் பொண்ணு வயசுக்கு வந்துட்டா!!!!

இன்று பக்கத்து வீட்டு பூர்ணிமாவின்  பூப் புனித விழா வுக்கு சென்றிருந்தோம்.  சிறு பெண் என்பதை விட குழந்தையாக இருந்தாள்.  அவளுக்கு அவளை விட கனமான மாலை அணிவித்து கை நிறைய வளையல்கள் 10 விரலுக்கும் 20 க்கு மேல் மோதிரங்கள், கழுத்து தெரியாத வண்ணம் தங்க கல்லு மாலைகள், ஒட்டியாணம் என அணிவித்து அதிலும் சிறப்பாக ஒரு சேலையை உடுத்தி அல்ல சுற்றி, முகத்தில் சந்தனம் பூசி அதன் நடுவில் ஒரு பெரிய குங்கும் பொட்டு இட்டு அமர வைத்திருந்தனர்.

 
உறவினர்கள், பெற்றோர் நண்பர்கள் என வரிசை கட்டி வீடியோவுக்கு தலைகாட்டி பணத்தை சாட்சியத்துடன் கொடுத்து செல்கின்றனர். சே, சே என அலுத்து கொண்டு எப்படா தப்பிபோம் என உதட்டை பிதற்றி கொண்டு எரிச்சலுடன்  நின்று கொண்டிருந்தாள் பூர்ணிமா.  அவள் தோழர்கள் வந்தவுடன் தலையை தட்டி விளையாடுகின்றாள், முகத்தில் அவளறியாது சிரிப்பு கொப்பளித்து கொண்டு வருகின்றது.  குழந்தையின் அம்மா ஒட்டியாணம் அணிந்து குழந்தைக்கு விஷேசமா அல்லது அம்மாவுக்கா என தோன்றும் விதம் அழகாக தோரணையாக வீடியோவுக்கு  நின்று கொண்டிருந்தார்.

 
ஒவ்வொரு நிகழ்சிக்கும் ஒரு அர்த்தம் கற்பிப்பது போல் இந்த நிகழ்சிக்கும் என சில கதைகள் சொல்லத்தான் செய்கின்றார்கள். ஒரு நண்பி சொல்லி கொண்டிருந்தார் இந்த நிகழ்ச்சி வச்சா தான் வரன் வருவார்களாம்!  பெண் படிப்பது 6 ம் வகுப்பில்!  சிரிப்பு தான் வந்தது எனக்கு. பழைய காலங்களில் பெரும்வாரியாக பெண் பெரியவள் ஆவது 9,10 வகுப்பு படிக்கும் போது தான் நடக்கும்.  பெண்களின் படிப்பை விட வரன் பார்க்கும் கடமை உணர்வுள்ள பெற்றோர்கள் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முறை மாமனுக்கு திருமணம் செய்து கொடுக்கும் காலம் அது.

 இது மனித உடல் வளர்ச்சியின் ஒரு பாகம் என்பதாக இருக்கும் போது ஏன் பெண்களுக்கு மட்டும் கொண்டாடுகின்றனர்.   ஆண்கள் வயதிற்க்கு வரும் நிகழ்ச்சியை ஏன் கொண்டாடுவதில்லை என கேட்டு கொண்டேன்.  மாலா அக்கா மகன் மோகனுக்கும் 12 வயது இருக்கும்.   குரல் மாறி மூக்கு பக்கம் மீசை எட்டி பார்க்க ஆரம்பித்து விட்டது. . அதும் சந்தோஷமான நிகழ்வு தானே ஏன் கொண்டாடவில்லை என கேட்டு கொண்டேன். மனிதன் கருவில் உருவாகுவதில் இருந்தே அவனுடைய வளர்ச்சியும் பல கட்டமாக நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது.  பெரியவள் ஆகின்றாள் என்பதே அவள் இனப் பெருக்கத்திற்க்கு தயார் ஆகி விட்டார் என்பது மட்டுமே.  இதற்க்கு என ஊராரை அழைத்து சொல்ல தான் வேண்டுமா? இப்படி கேள்விகள் நிறையவே வந்தது.

 
  பூர்ணிமா அம்மா தான் 
மண்டபம் நிறைந்து நின்றார். என் கண் முழுக்க அவர் முடி அலங்காரத்தில் இருந்தது. இடுப்பில் அணிந்திருக்கும் ஒட்டியாணம் இன்னும் என்னை ரொம்ப கவர்ந்தது. பூர்ணிமா அப்பாவுடன் நாணத்தில் போட்டோவுக்கு முகம் காட்டுவதிலே மும்மரமாக இருந்தார். ஏனோ அவ அப்பா ரொம்பவும்  வெட்கத்தில் நெளிவது  பல பொழுதும் தெரிந்தது.
 
பூர்ணிமாவுக்கு கடந்த வாரமாக  சத்தான ஆகாரம் கிடைத்ததோ தெரியவில்லை. உடல் சுகாதாரம் பற்றியுள்ள  வழிமுறைகள் சொல்லி கொடுத்தார்களோ என்னமோ. நேற்று வரை தெருவில் சிறு பெண்ணாக விளையாடி கொண்டிருப்பவளுக்கு அவளுக்கே பொருந்தாத ஆடை அணிகலங்கள் அணிவித்து பதட்டமான, நெருக்கடியான சூழலில் நிற்கவைத்துள்ளது மட்டும் தெரிந்தது. சில வயதான கிழவி இப்போதை தங்கள் மனம் போன போக்கில் கருத்தை அள்ளி வீச ஆரம்பித்து விட்டனர்.நல்ல காலம் நேரம் பார்த்ததில் அவள் அப்பாவுக்கு வியாபாரத்தில் ஏற்முகம் தானாம்!   
 
இனி தமிழ் சினிமா பார்க்க பார்க்க  ஒரு சடங்கு நிகழ்ச்சியை வைத்து
பொல்லாத காதல் கத்திரிக்கா என கற்பனையில் பறக்க போகிறாள் என்று மட்டும் எனக்கு விளங்கியது.  முன் வாசல் பக்கவாட்டில் உட்கார வைத்து வரிசையாக பலர் போய் தண்ணீரை குடம் குடமாக ஊற்றுவது தான் எனக்கு ரொம்ப நெருடலான நிகழ்ச்சியாக இருந்தது. தாய் மாமன் பொண்டாட்டி என்று பூர்ணிமா அத்தை மல்லிகா அடித்த காமடி என்ற கெட்ட பேச்சு   கொஞ்சம் நெளிய வைப்பதாக தான்  இருந்தது. இதில் யார் யாரோ வந்து நெத்தியில் சந்தனம் வைத்து கொண்டிருந்தனர்.  குடும்ப சண்டையால் நெருங்கிய உறவினர்களை அழைக்கவில்லையாம்!

 

இதிலும் அக்குழந்தையின்  உறவினர்கள் , அம்மாவின் நட்பு வட்டாரம் என சம்பந்தம் இல்லாத யார் யாரோ ஒழுக்கம் சொல்லி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.  அடங்கி இரு, ஓடாதே, பேசாதே, பார்க்காதே என ஆயிரம் உபதேசங்கள்!   இந்த மாதிரி உடை வாங்கி கொடுக்காதை, பாட்டு, நடன வகுப்புக்கு அனுப்ப வேண்டாம் என பல பல... பார்வையே போலிஸ் கள்ளனை பார்ப்பது போன்று  தான் இருக்கும். 
 
 
மாமா, சித்தப்பா, அண்ணா என பாசமாக பழகியவர்கள் எல்லாம் தள்ளி நிற்பது போல் தோன்றிய காலம் தான் நினைவிற்க்கு வந்தது.  "நீந்த தெரியாதவளை கடலில் தள்ளி விடுவது போல் தான் இருந்தது" நிகழ்ச்சிகளை பார்க்க பார்க்க.

 

எப்படியோ ஒரே நாள் நிகழ்ச்சி ஊடாக  சடை பின்னுவதில் இருந்து உடை அணிவதில் வர பாவாடை சட்டையில் இருந்து தாவணி என சின்ன பெண் பூர்ணிமாவை உடன் காப்பி போல் "உடன்  பெண்ணாக" உருவாக்கி விட்டார்கள்.   

 
ஒரு பெண் படிப்பில் முதலாவது வருவது, நல்ல வேலை கிடைப்பது இதற்க்கு என ஒரு பாராட்டு விழா வைப்பது போல் இன்றுவரை கேள்விபட்டதில்லை. வயசுக்கு வந்து விட்டாள் என்பது அப்படி கொட்டடித்து சொல்ல என்ன அசாதாரணமான நிகழ்வா என சிந்தித்து பார்க்க வேண்டும். 
மேலும் பழைய காலம் கூட்டு குடும்பத்தில், சொந்த ஊரில் சொந்த பந்தங்களோடு வாழும் சூழல்.  ஒவ்வொரு காரணம் சொல்லி எல்லோரும் ஒன்று கூடி மகிழ்ந்து உண்டு குடிக்க ஒரு நிகழ்ச்சி தேவைபட்டிருக்கலாம். இன்று தனி குடும்பம்,  இன்று அதுவும் மாறி  'அணு' குடும்பமாக மாறியுள்ளது.  பல குடும்பம் சொந்த ஊரை விட்டு வெளி ஊர்களில் வாழும் சூழலில் இவ்வகையான நிகழ்ச்சியின் நோக்கம்,தாக்கம் என்னவாக இருக்கும்?
நாங்கள் வளர்ந்த கேரளாவில் இது போன்ற நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. வயசுக்கு வருவது பெற்றோருக்கு மட்டும் தான் தெரியும். இலைமறை காயாகத்தான் அறிவிப்பார்கள்.  ஆர்வகோளாறு உள்ளவர்கள் கூட நம் ஊரில் நடப்பது போல் பொண்ணு வயசுக்கு வந்திட்டாளா என கேட்க மாட்டார்கள்.   நாடுகளுக்கே ரகசியம், ராணுவ ரகசியம் என இருக்கும் போது பெண்ணிற்கு  தான் கூடாதா?ஒரு குழந்தை சத்தான சாப்பாடு, பாரம்பரியம் என சீக்கிரமே உடலளவில் வளர்ந்து விட்டாலும் மனதளவில் அவள் குழந்தைய்  பருவத்தில் தான் இருப்பாள்.  பல அம்மாக்களும் இதை அணுக வேண்டிய முறையில் அணுகுவது கிடையாது, அறிவியல் நோக்குடன் இதை காண்பது இல்லை.  சில ரசாயன மாற்றங்களால் உடலில் மட்டுமல்ல சிந்தையிலும் எண்ணங்களிலும் சில மாற்றம் நிகழ்வதையும் அதை எவ்வாறு கையாளுவது என சொல்லி கொடுப்பது இல்லை. திருமணத்திற்க்கு வரனை அழைக்க முன்னோட்டம் என்று கூறினால் கூட 12 வயதில் இருந்து  மேலும் 10-15  வருடங்கள் காக்க வைப்பது போல் ஆகாதா?இன்னும் வேறுவிதமாக நினைத்தால் கல்யாண சந்தையில் பெண்ணை கொண்டு நிறுத்தும் முதல் நிகழ்ச்சி தானோ இது என தோன்றியது.

மாதாவிடாய் பற்றிய அருமையான பதிவு! 

17 comments:

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT..!!!

Dr.எம்.கே.முருகானந்தன் said...

"நாடுகளுக்கே ரகசியம், ராணுவ ரகசியம் என இருக்கும் போது பெண்ணிற்கு இருக்க தான் கூடாதா?"
"நம் தமிழர்கள் அறிவு சார்ந்தது என்பதை விட உணர்வு சார்ந்தே முன் செல்கின்றோம்.."
நல்ல கருத்துக்களுடன் வழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல கட்டுரை. நன்றி.

vasantha said...

Grand mothers and great grand mothers got married at a very early age. When the girl attains the 'age'.. the women from her family perform a small ritual by inviting only those who are close to the girl. This was a way of informing through the relatives that their daughter is ready to be married and are ready to receive proposals from groom's family.
Now,it has become a business.

Anonymous said...

நல்ல கருத்துக்களுடன் வழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல கட்டுரை. நன்றி
Pavan

J.P Josephine Baba said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி Shan Nallah ஐயா, டொக்டர் சாப், வசந்தா அவர்களே, மற்றும் பவன் நண்பரே.உங்கள் வரவு என் பதிவுக்கு மேலும் வலு சேர்க்கின்றது!

வந்தியத்தேவன் said...

இதனை மாற்ற எவராலும் முடியாது பல பெற்றோர்களும் சில சிறுமிகளும் இதனை ஆதரிக்கின்றார்கள். பெற்றோர்கள் தங்கள் பெருமையைப் பறைசாற்றவும் சிறுமிகள் தங்கள் நண்பிகளுக்கு இந்தகொடுமை நடந்திருந்தால் தமக்கும் நடக்கவேண்டும் என்ற எண்ணத்திலும் இதற்க்கு வழி சமைக்கின்றார்கள். நல்லதொரு கட்டுரை.

உங்கள் வலையின் ஃபொண்ட் கலரை மாற்றுங்கள் நீலக்கலரில் வாசிக்க மிகவும் கஸ்டமாக இருக்கின்றது. இதனால் பல வாசகர்கள் வராமலே விட்டுவிடுவார்கள்.

J.P Josephine Baba said...

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நண்பர் வந்தியத் தேவன் அவர்களே!

விசரன் said...

இது பற்றி பல விதமான கருத்தக்கள் உண்டு. ஆனால் வெளிநாடுகளில் இது ஒரு பெருங்கூத்தாக மாறியிருப்பதை மறுப்பதற்கில்லை. அதிகமானவர்கள் குழந்தையின் மனதை மறந்த போகிறார்கள்.பெற்றோரும் குளந்தையின் மனதில் உடை, நகை, பணம், வீடியோ, புகைப்படம்,விழா என ஆசைகளையும் ஊட்டுவதையும் காணக் கூடியதாக இருக்கிறது.

bogan said...

இந்த இடத்தில் ஒரு கவுண்டர்பாய்ன்ட் வைக்கிறேன்.இந்தச் சடங்குகள் எல்லாம் அந்தக் குழந்தைகளைச் சாக்காக வைத்துச் செய்யப் பட்ட்டலும் உண்மையான நோக்கம் அதுவல்ல..நமது பழைய இலக்கியங்களை எடுத்துப் படித்தால் கற்பழிப்பு குழந்தைகள் மேல் பாலியல் வன்முறை போன்ற பாலியல்குற்றன்களே நடக்காத ஒரு உதாரண சமூகம் போன்ற மேலோட்டச் சித்திரமே கிடைக்கும்.ஆனால் சற்று நுணுகிப் படித்தால் கூட தெரியும் அவை ஏன் குறிப்பிடப் படவில்லை எனில் அவை உண்மையிலேயே பெரிய குற்றங்களாகக் கருதப் படவில்லை என்பதுதான்!காரணம்.பத்து ஆண்டுகளுக்கு ஒரு போர் ஒரு ராஜா என்றிருந்த நிலை.ஆனால் அன்று அப்போது உலகின் மற்ற பகுதிகளைவிட இங்கு நிலைமை எவ்வளவோ மேல் என்றுதான் சொலவேண்டும்.இந்தச் சூழலில் பெண்குழந்தைகளை மறைமுகமாகப் பாதுகாக்கும் ஒரு பலவீன முயற்சியாக மட்டுமாகத்தான் இது போன்ற சடங்குகள் அறிமுகப் படுத்தப்பட்டன.ஒரு பெண்ணுக்கு சமூகத்தில் எந்த ஒரு பிரதிநிதித்துவமும் இல்லாத நிலையில் சடங்கு வளைகாப்பு போன்ற இந்தஸ் சடங்குகள் மட்டுமே வாழ்நாளில் அவள் பெற்ற ஒரே கவனமாக இருந்தது.இன்னும் பல பெண்களே அதை விரும்பும் காரணம் அதுவே.காமம் சந்ததி வளர்த்தல் போன்ற விசயங்கள் இந்தியச் சமூகத்தில் அந்நிய ஆதிக்கம் வரும்வரைப் மறைக்கப் படவேண்டிய விஷயமாகக் கருதப் படவில்லை.விக்டோரியன் காலத்தில் ஒரு பெண் கர்ப்பம் என்று கூட சொல்ல மாட்டார்கள்.அவர் குடும்ப வழியில் இருக்கிறார் என்றே சொல்லப்படும்..கர்ப்ப சமயங்களில் வெளியே வரக் கூட மாட்டார்கள்.அல்லது அப்போது வயிற்ரை மறைப்பதற்கென பெரிய பிரத்தியேக அடிகள் வடிவமைக்கப் பட்டன.காமமே வீழ்ச்சி என்ற யூத சித்தாந்தத்தில் இருந்து வந்த மதிப்பீடுகள் இவை.இஸ்லாம் மூலமாகவும் கிறித்துவம் மூலமாகவும் இந்தியாவுக்குள் வந்தவை.இங்கிருப்பது இருந்தத நேரெதிரான மதிப்பீடுகள்.எது சரி தவறு என்பதை காலமே தீர்மானிக்கும்.ஏனெனில் மிகச் சாதாரணமான ஒரு சடங்கு கூட சரித்திரத்தில் மெல்ல மெல்ல வேர்விட்டு வளர்ந்தவை.அதனால்தான் அவற்றை சட்டென்று மாற்றிவிடுவது முடியாது இருக்கிறது.உண்மையிலேயே அது ஒழிக்கப் படவேண்டிய விஷயம் என நினைத்தால் கொஞ்சம் சரித்திரப் பயிற்சியுடன் உணர்வுடன் அதை அணுகினால்தான் வெற்றி கிடைக்கும் இதை நான் சொல்வதின் காரணம் பூப்பெய்துதல் கொண்டாடப் படவேண்டிய விசயமல்ல என்று சொல்கிற கட்டுரையின் ஆழத்தில் அது சற்று அசந்கியமான விஷயம் என்ற அருவெறுப்பு உணர்வும் கலந்து இருப்பதாகத் தோன்றியதாலேயே....

kuppuswamy said...

A good informative and comparative picturisation of past and the present mentality of tamil people and others about an happening in everyones life. With the scienticfic advancement and changes taking place in the social setup like intercaste marriage,alliance through mass media i.e. newspaper, online matrimonial sites the importance given to such a function should diminish and we should develope a mentality which wil put aside unrational traditional customs

Mayoo Mano said...

Great Article and needed one too..!!

J.P Josephine Baba said...

விசரன் அண்ணன், நண்பர் குப்புசாமி மற்றும், தோழர் மாயோ மனோ அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்திற்க்கும் மிக்க நன்றி!

J.P Josephine Baba said...

நண்பர் Bogan,
உங்கள் மறுஇடுகைக்கு மிக்க நன்றி. பல அறியாத தகவல்கள் பகிர்ந்திருந்தீர்கள்.

அருவருப்பு உணர்வு துளியுமில்லை, ஆனால் பெண்களின் தன்மான உணர்வை விடுத்து, பெண்களை உடல், அலங்காரம், ஆடம்பரம் சார்ந்த பிம்பமாக்கி விடுகின்றார்களோ என்ற ஆதங்கமே.

Rathnavel said...

அருமையான பதிவு.
நன்கு யோசிக்கிறீர்கள். உங்களது பதிவும், பின்னூட்டங்களும் நிறைய செய்திகளை தருகின்றன.
வாழ்த்துக்கள்.

Gomathi said...

\\ஆனால் பெண்களின் தன்மான உணர்வை விடுத்து, பெண்களை உடல், அலங்காரம், ஆடம்பரம் சார்ந்த பிம்பமாக்கி விடுகின்றார்களோ என்ற ஆதங்கமே. \\

இதில் பெண்ணின் தன்மான உணர்வு எவ்வாறு பாதிக்கபடுகிறது என்பது எனக்கு புரியவில்லை. ஏன் உடல் ஆடை அலங்காரம் எல்லாம் கூடாதா என்ன? எனக்கு இது போன்ற சடங்குகள் எனக்கு தவறாக தெரியவில்லை.

அரை குறை ஆடைகள் அணிந்து கொண்டு பூனை நடை நடந்தாள் அது நாகரீகம். வீட்டில் சொந்த பந்தங்களுடன்... மாமன் சீர் சித்தப்பா சீர் என்று வழங்கி, தாய் மாமன் ஓலை கட்ட நடந்தால் அது அநாகரீகமா?

எனது தங்கைக்கும் தமக்கைக்கும் இது போன்ற நிகழ்ச்சிகள் எங்கள் குல அடிப்ப்டையிலான அனைத்து சம்பிரதாயங்களும் செய்தோம். அவர்கள் எந்த விதத்திலும் வருத்தப்படவில்லையே? மாறாக மகிழ்ச்சியாக தான் இருந்தார்கள்.

பாரத பணபாட்டில் காமம் மற்றும் அதை சார்ந்த விசய்ங்கள் அசிங்கமாக கருதப்படவில்லை.

ஆனால் ஒரு சிலக் கோட்பாடுகள் அதை தள்ளி வைத்தன. ஆனால் வெறுக்கவில்லை.

18 வயதிற்கு முன்னாள் திருமணம் செய்து கொண்டாள் தவறு என்று சொல்லும் முற்போக்குகள், 18 வயதிற்கு முன்னாள் உடலுறவு கொள்ளுதள் தவறில்லை என்று பேசித் திறிகிறார்கள். ஆங்கில செய்தி சேன்ல்களை பார்ப்பவர்களுக்கு இது நன்றாக தெரியும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்தையும் உன்னதமாக நினைத்தவர்கள் தமிழர்கள். அதை தான் இதிலும் செய்கிறார்கள்.

எனக்கு ஒன்று புரியவில்லை. இதில் என்ன தவறு இருக்கிறது. சரி ஒரு பெண் வயதிற்கு வந்த உடன் அதை சந்தோசமாக கொண்டாடுகின்றனர். இதில் என்ன தவறு? ஏன் இதில் பிரச்சனை?

கேரளாவின் யோக்கியதை என்ன என்பதும் அவர்களின் ஒழுக்க வாழ்வு எப்படி பட்டது என்பதும் அனைவரும் அறிந்ததே?

எல்லா மேலை நாடுகளிலும் வயதிற்கு வந்த உடன் செய்யும் அலங்காரங்கள், சேட்டைகள் எல்லாம் தாங்கள் அறியாததா?

வெளி நாட்டுகாரன் ஜீன்ஸ் போட்டு செய்தால் அது நாகரிகம் நம் நாட்டுகாரன் சேலை கட்டி செய்தால் அது நாகரிகம் அற்ற செயல் அது தானே தாங்கள் சொல்ல விருப்புவது.

அதுவும் தவிர ஒரு காலத்தில் அனைவரும் கூட்டு குடுமபமாக வாழ்ந்து வந்தார்கள். எல்லா விசயத்திற்கும் கூடி கொண்டாடுவது தான் வழக்கம். சொந்தத்தில் தான் திருமணம் நடக்கும். இதில் என்ன தவறு.... அதற்கு ஏற்றார் போல் சடங்குகள் இருந்தனவே அன்றி வேறு எந்த விசயமும் கிடையாது.

அதற்காக mic set போடுவது எல்லாம் கொஞ்சம் அதிகம்... ஆனால் இதை கொண்டாடுவது நாகரிகம் அற்ற செயல் என்று நீங்கள் கூறுவது ஏற்று கொள்ளக் கூடிய செயல் அல்ல?

தமிழர்கள் அவர்களை விட பல மடங்கு உயர்ந்தவர்களே?

பெண்கள் வய்திற்கு வருவது உடல் ரீதியாக தெளிவாக தெரியும். ஆண்களுக்கு வயதுக்கு வருவது அவர்களுக்கே தெரியாது என்பதை நான் எப்படி சொல்வது :)

Kannan said...
This comment has been removed by a blog administrator.
J P Josephine Baba said...

This is my opinion Mr. Kannan. I never ask anyone to accept my opinion. You mind your words and attitude.

Post Comment

Post a Comment