10 Oct 2010

கடற்கரை கோயில்கள்!


பயணங்கள் எப்போதும் மகிழ்ச்சி தருபவை அதிலும் சிறப்பாக கடல் தேடியுள்ள பயணம் மகிழ்ச்சி  மட்டுமல்ல அமைதியும் தருபவை!   இந்த முறை எங்களது மகனின் விருப்பத்திற்க்கு இணங்க மணல் மாதா கோயிலும் அதன் அருகிலுள்ள கடல் சென்றோம். திடீர் என எனது கணவர் உவரிக்கும் சென்று விட்டு செல்லலாம் என கூறியதால் எங்கள் இரு சக்கர வாகனம் உவரி நோக்கி பாய்ந்தது.  இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது ஒரு சில அசவுகரியங்கள் இருப்பினும்  இயற்கை காற்றுடன் காற்றாக  பயணிக்கும் சுகம் அலாதியானது.. 

திசையன்விளை என்ற ஊரிலுள்ள கடையில்  கொஞ்சம் மஸ்கோத் அல்வா, கடலை மிட்டாய் போன்றவை வாங்கி கொண்டு பயணம் தொடர்ந்தோம்.  மஸ்கோத் அல்வா தேங்காய் பாலில் கோதுமை மாவு சேர்த்து அல்வா போன்றே தயாரிக்க படுகின்றது. அதன் மணமே ஒரு சுவையை தருகின்றது!  



வியாபார நிமித்தமாக இலங்கைக்கு சென்று வந்த   முதலூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஒருவரே மஸ்கோத் அல்வாவை தமிழகத்தவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 

தற்போது அவருடைய
மகன்கள் இதன் தயாரிப்பு மற்றும் விற்பனயில் உள்ளனர்.  முதலூர் மஸ்கோத் என்றால் தமிழகம் மட்டுமல்ல வெளிநாட்டு தமிழர்களுக்கும் பிடித்தமான தின் பண்டமே!
  
தமிழகத்தில் பெயர் எடுத்து சொல்லும் கிறிஸ்தவ கோயில்களில் ஒன்றாக  உவரி கோயிலுக்கு சென்றோம் .  மக்கள் சிலர் ஜெபித்து கொண்டிருந்தனர், பலர்  கூட்டு குடும்பமாக வந்தவர்கள் சத்தம் போட்டு பேசி கொண்டிருந்தனர்.  வழிபாட்டு இடங்களிலும் கும்மாளமா, என என் மனம் கேட்டு கொண்டது.  ஒரு சிலர் கோயில்களுக்குள் கூட தம் பெருமையை காட்டி கொள்ளவே வருகின்றனர்.   தன் மனபாரத்தை  ஆண்டவன் முன்பு இறக்கி வைக்கலாம் என்ற  எண்ணத்துடன் கோயில்களுக்கு  வரும்   மக்களை நிலை அங்கையும் பரிதாபமாகத் தான் உள்ளது.  ஆலயம் என்றவுடன் மெழுகுவர்த்தி பற்ற வைப்பது மொட்டையடிப்பது போன்ற   ஆசாரங்கள்  மட்டுமே  சிறந்தது என்ற எண்ணமே  இவ்வகையாக செயலாற்ற தூண்டுகின்றது. கடவுள் என்ன இவர்களுக்கு வேண்டாத முடிக்கும்  மெழுவர்த்திக்குமா காத்திருக்கின்றார் என்ற புரிதல் மட்டுமே இவர்களை திருத்தும்..  சக மனுஷனையே மதிக்காத எண்ணத்தின் உச்சமே ஆலயங்களில் ஆர்ப்பாட்டம்  கொள்ளும் மனம்.



இளைப்பாறுதலுக்கு என கோயில் நிற்வாகத்தினரே மண்டபம்  கட்டியிட்டுள்ளனர்.  தமிழர்கள் கலாச்சாரமே  தாறுமாறாகத்தான் ஓடுகின்றது. தமிழர்களுக்கு சாப்பிட வேண்டும் செறிக்க  பேசி பேசி கொண்டேயிருக்க வேண்டும் என முடிவெடுத்தது போல் சில வேளைகளில் தோன்றும்.  இதிலும் சோகமான காரியம் ஆலய நிறுவாகத்திற்கு  ஆலய-முன் வாசலை திறந்து வைக்கும்   மனம் கூட இல்லை என்பதே.  ஞாயிறு என்பதே கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டு நாட்கள் . அன்று கூடவா ஆலய முன் வாசலை திறந்து வைக்க கூடாது? மனதிற்குள் குமுறலுடன் கடல் நோக்கி கொண்டிருந்த போது அலைகள் வரும் வேகம் கண்ட போது  அலையுடன் என் மன பாரவும் கடலுக்குள் சென்றதை கண்டேன்.


கோயில் பக்கத்தில் மன நிலை பாதிக்க பட்டவர்களுக்கு என மண்டபம் இருந்தது.  அங்கே நிறைய பெண்கள்  கால்களில்  சங்கிலிகளால்   பிணைக்கப்பட்டு தூண்களில்  கட்டபட்டு இருந்தனர். அவர்கள் ஏதோ அவர்களுக்குள் கதைத்து கொண்டிருப்பதை பார்க்க நேர்ந்தது.





பின்பு நாங்கள் கப்பல் மாதா கோயிலை நோக்கி சென்றோம். அழகாக காட்சியாக இருந்தது.  கோயில் மரத்தால் கட்டபட்டது போல் காணபட்டது.தூணுகளில் பல நாடுகளின் கொடிகள் வர்ணம் பூசப் பட்டிருந்தது




 சில புதுமண தம்பதிகளும் ஜெபித்து கொண்டிருந்தனர். பள்ளி  மாணாக்களும் வந்திருந்தனர். அவர்கள் கோயிலை  ஏறெடுத்து பார்த்தது போல் தோண்றவில்லை ஒரே தாவலாக கடலுக்குள் போய் விளையாடி கொண்டிருந்தனர். எங்கள் 8 வயது மகனும் சண்டையிட்டு கொண்டிருந்தான் தானும்  கடலுக்குள் விளையாட செல்ல வேண்டுமென்று.  அவனை இந்த கடலை விட மணல் மாதா கோயில் மண் சிவப்பு கலரில்  இருக்கும் என கூறி இழுத்து சென்றோம்.





அதற்குள் பசி கிளறியது. என்னவருக்கு கடற்கரை வந்து விட்டாலே மீன் சாப்பாடு தான் மனதில் இருக்கும். அதற்கு ஏற்ப  "மீன் குழம்பு சாப்பாடு" என்று பலகை மாட்டியிருந்த கடையை நோக்கி படையெடுத்தோம். பொரித்த மீன் என்று பஞ்சத்தில் அடிபட்ட 3 மீன்களும்  சாம்பார் போலுள்ள மீன் குழம்பும் தரபட்டது.  பசியில் விருவிரு என சாப்பிட்டோம். ஆனால் நான் வைக்கும் மீன் குழம்பு  இதைவிட எவ்வளவோ மேலாக  இருந்தது. 



மீன் குழம்பு சாப்பாட்டுக்கு கன்னியாகுமரி நாகர்கோயில் பக்கம் தான் போக வேண்டும் என நினைத்து கொண்டே கடையை ஒரு புகைபடம் எடுத்து கொண்டு வெளியேறினோம். ஒரு சாப்பாடு 40 ரூபாய் என பில்லை பார்த்த போது நகரம் வீதியிலுள்ள கடைகளுக்கு ஈடாக பில் போட்டிருந்தது காண முடிந்தது.. வேலை வேலை என புறா கூண்டு போலுள்ள வீடுகளில் உற்றோர் உறவினர் அற்று தள்ளாடும் போது நல்ல வீடுகள் விஸ்தாரமான பள்ளிகள், பிரமாண்டமான ஆலயங்கள், காற்றோட்டமான சூழல் என இந்தியா கிராமத்தில் தான் ஒளிர்பெறுகின்றதை வழி நெடுகை காண முடிந்தது.  .



மணப்பாடு கோயில்


அடுத்து எங்களுடைய பயணம் மணல் மாதா கோயில் நோக்கி போய் கொண்டிருந்தது.  என்னவரிடம் சிவப்பு மண் என  சொன்னீர்களே என கேட்டபோது அரசியல்க்காரன் எல்லாம் எடுத்து வித்திருப்பான் என கூறிவிட்டார்.  பின்புத்தான்  சென்றது மணப்பாடு கோயில் என அறிந்து கொண்டோம்.  ஆலயம் மேட்டிலும் , கடல் பள்ளத்திலுமாக கண்கொள்ளா காட்சியாக , கடல்  நீலை பச்சை கலந்த  சேலையணிந்த அழகான மங்கைபோல் காட்டியளித்தது.  அங்கு இருந்தது ஒரு பெரிய கல் சிலுவை, கடல் போன்ற திரைப்படங்கள் இக்கடற்கரையில் தான் எடுத்துள்ளனர். தமிழகத்தில் காணும் மிக அழகான கடல்களில் ஒன்று. அதன், நிறம், தோற்றம் பார்த்தாலும் பார்த்தாலும் நம்மை விட்டு நகராத மகிழ்ச்சியை தருவது. சின்ன குழந்தைகளை வைத்துள்ள பெற்றோருக்கு மிகவும் பிடித்து போகும் கடல் இது. குழந்தைகளையும் நாம் தண்ணீரில் விளையாடு விடும் வசதியுடன் கடல் சில இடங்களில் அமைதியாக காட்சியளிப்பதை காணலாம். குழந்தைஅக்ள் ரசனைக்கு ஒத்த சிறு படகுகள் வள்ளம் போன்றவையும் காட்டி கொடுக்கலாம். சில குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரம் சென்றால் கடலில் இருந்து பிடித்து வந்த மீன்களையும் வாங்கி வரலாம்.  நம் நாட்டில் பெரும் பாதிப்பே உள்ளூர் அமைப்பு காதி மத பிரச்சனையால் வளர்ச்சி காணாது இருப்பது தான். இந்த கடற்கரையும் சுற்றுலா தளமாக உருவாக்கினால் மக்களை வசீகரிக்கும் பல கூறுகள் இந்த கடலுக்கு உண்டு. இருப்பினும் சமீப இரு வருடங்களாக பெப் மாதங்களில் கடல் விளையாட்டுகள் நடந்து வருகின்றது. 





கோயில் அமைப்பு  மிக மிடுக்காக இருந்தது.  கோயிலை சுற்றி கடலால் சூழப்பட்ட சூழல் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. பிரான்ஸிஸ் சவேரியார் தவம் புரிந்த கல் குகையும் இங்கு உள்ளது. கடல் தண்ணீரால் அரிக்க பட்டிருந்தாலும் பராமரித்து வைத்திருந்தனர். மத்திய அரசின் கலங்கரை விளக்கமும் அங்கிருந்தது.

உவரி கோயிலில் ஒரு கூட்டம் பேசி கொண்டிருந்தது என்றால் இங்கு ஒரு சில பெண்கள் குறுக்கும்  நெடுக்குமாக படுத்து கதைத்து கொண்டிருந்தனர்.  




இரண்டு ஆண்களை கடலில் பார்த்தோம். அவர்களில் ஒருவர் மணலில் உருளுவதும் பின்பு கடல் தண்ணீரில் குளிப்பதாக இருந்தார். ஒரு வேளை வேண்டுதலா அல்லது குடித்துவிட்டு விளையாடுகின்றாரா என தெரியாது நாங்கள் தள்ளி சென்று எங்கள் மகன் கடலில் விளையாடுவதை பார்த்து ரசித்துகொண்டிருந்தோம்.  அவனுக்கு கடலை விட்டு வர மனம் இல்லை தான். இருப்பினும் ஒரு வழியாக சிப்பி பொறுக்க என கூட்டி சென்றோம். நிறைய சிப்பிகள் வித விதமான உருவத்திலும் வர்ணத்திலும் எடுத்து வந்துருந்தோம்.







 கடலில் பார்த்த  பார்த்த இம்மனிதர்கள் முட்டு காலில் நின்று உருகி செபித்து கொண்டிருந்தனர். எனக்கு அந்த சத்தம் இட்டு பேசும் பெண்களை கண்ட போது 2000 வருடம் முன்பு சாட்டை எடுத்து அடித்து விரட்டிய யேசு நாதரையே நினைவு வந்தது.  




மணி 5  ஆகிவிட்டது. இப்போழுது கிளம்பினால் தான்  7 மணிக்குள் திருநெல்வேலி செல்ல முடியும் என்று நோக்குடன் திரும்பினோம்.  வ்ழியில் ஒரு கறுப்பு கல்லிலான  ஆலயத்தை நோக்கி உள்ளே சென்றோம். கோயில் வாசல் சென்ற போது கோயில் மணி ஒலித்தது.  மிகவும் இன்பமான கேட்க இயலாத அக்மார்க்கு கோயில் மணி ஓசை!   இப்போது கோயில் மணியும் மின் கருவியால் இயக்கப் படுவதால் ஒரு உண்மையான இனிமை காணப்படுவது கிடையாது.  மேலும் கோயில் மணி அடிப்பதற்கும் ஆள் கிடைப்பது இல்லை. முன்பு திருப்பலி துவங்கும் ஒரு மணி நேரம் முன்பு ஒரு மணியும் அரை மணி நேரம் முன்பு இரண்டாவது மணி, திருப்பலி தொடங்கும் முன் மூன்றாவது மணி என கோயில் மணி பல வேலைகளை பலருக்கு ஒரே நேரம் செய்தது.  சில ஊர்களில் தீ போன்ற ஆபத்து வரும் போதும் கோயில் மணி அடித்து தெரியப்படுத்துவார்கள். எனக்கு பிடிக்காத கோயில் மணி  இறந்தவர்களை வீட்டில் இருந்து எடுத்து வருவது தொடங்கி ஆலயம் வரும் வரை து கொண்டே இருக்கும் சாவு மணியே!. பணக்காரர்கள் இறக்கும் போது கோயில் மணியும் ரொம்ப சோக மழைபொழிவது போல் தோன்றும்.  ஒரே கோயில் மணியால் பல விதமான ஒலியை பல தருணங்களில் தர முடியும்  என்பதே இதன் சிறப்பு.  



மறுபடியும் பசி பிடித்து கொண்டது. திருச்செந்தூர் நோக்கி பயணித்து கொண்டிருந்தோம். ஒரு கிலோ மைல் வருவதற்குள் எங்கள் வாகனத்தின் சங்கிலி அறுந்து விட்டது. தெருவோரம் கவலையுடன் நின்று கொண்டிருந்தோம். அந்த வழியாக வந்த டிராக்டர்காரரின் உதவியுடன் மெக்கானிக்கு தெரிவித்தோம். வெகு நேரமாகியும் மெக்கானிக் வர காண வில்லை.  ரோட்டோரம் உட்காந்து  வைத்திருந்த முதலூர் அல்வாவை தின்று கொண்டிருந்தோம். அதற்குள்  முக்கால் மணி நேரம் ஆகி விட்டது. இனி மெக்கானிக்கை நம்பலாகாது என எண்ணி தள்ளி கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தோம்.




ஆட்டோவில் இரு மனிதர்கள் வந்து எங்கள் வண்டியை இழுத்து ஒரு முச்சந்திக்கு கொண்டு விட்டனர். நானும் மகனும் ஆட்டோவுக்குள் இருந்தோம், என்னவர் வண்டிமேல் இருந்து கொண்டு ஒரு கையை ஆட்டோவில் பிடித்து கொண்டு வந்தார்.  மெக்கானிக் ஒரு வழியாக வந்து சேர்ந்தார்.  நாங்கள்  பழுது பார்த்துவிட்டு கிளம்பிய போதே இருட்ட ஆரம்பித்துவிட்டது.  பழுது பார்த்து முடியும் வரை நின்று ஆட்டோக்காரர்  எங்களை வழி அனுப்பி சென்றார்.   இவரை போன்றவர்களை காணும் போது உலகம் எவ்வளவு சிறப்பானது அதிலுள்ள மனிதர்களும் சிறந்தவர்கள் என தோன்றுகின்றது. 



பயத்துடனே வந்து கொண்டிருந்தோம். ஏன் என்றால் ஆறு மாதம் முன்பு  தான் இதே போன்று நாகர்கோயில் இருந்து வரும் போது நாங்குநேரி  பக்கம்  மாட்டு  கூட்டத்திற்க்குள் வண்டியை விட்டு  முதுகு உளுக்கெடுக்க பாவூர் சத்திரம் வரை சென்று வர வேண்டியிருந்தது.







நல்ல முறையாக வீடு வந்து 8 மணிக்கு சேர்ந்தோம். கடல் நினைக்க நினைக்க சுகமாக இருந்தது. இனி மணல் மாதா கோயில்  கடலுக்கு செல்ல வேண்டும்.....சென்று வந்து உங்களிடம் கதைக்காமல் இருப்பேனோ!!!







10 comments:

  1. #ஆலயம் என்றவுடன் மெழுகுதிரி பத்த வைப்பது மொட்டயடிப்பது போன்ற ஆசாரங்கள் மட்டும் சிறந்தது என்ற எண்ணமே இதன் காரணம். கடவுள் என்ன இவர்களுக்கு வேண்டாத முடிக்கும் மெழுவத்திக்குமா காத்திருக்கின்றார்#

    உங்கள் ஆதங்கம் நியாயமானது. பலருக்கு தமது உலகமே முக்கியமாயிருக்கிறது. மற்றையவர்களைப் பற்றி கவலையில்லை.

    என்ன செய்வது .. சகித்துத் தான் ஆகவேண்டும்

    ReplyDelete
  2. நன்றி விசரன், உங்கள் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  3. GREAT EXPERIENCE! WHEN I VISIT TN ,I LIKE TO VISIT THIS PLACE,NAGERCOIL,THUTHUKUDI ETC! I VISITED ALREADY N/S.INDIA INCLUDING TN WITH MY FAMILY!SAY HALLO TO YOUR FAMILY TOO!I LIKE TO SEE YOU ALL SOON!

    ReplyDelete
  4. Sir,
    I am so thankful to you for your comment. You are always welcome to Tirunelveli.We heartly invite you.

    ReplyDelete
  5. Your this post made me remember my last Christmas holidays with my parents. We visited around 20 famous churches from Thoothukudi to Thiruvanandapuram coast including the ones you mentioned here. This website also inspired us to go on this southern TN pilgrimage. http://www.manavai.com/

    ReplyDelete
  6. அன்பின் சகோதரி,

    நல்லதொரு அனுபவப் பகிர்வு. வாசகர்களை உங்களுடன் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுவது போல திறம்பட எழுதியிருக்கிறீர்கள்.

    ஒரு சின்னத் திருத்தம். மஸ்கோத் செய்வது தேங்காய்ப் பாலிலல்ல.

    கோதுமை மா, நெய், சீனி, கலர் இவ்வளவு போதும். வீட்டிலேயே செய்துவிடலாம். நீரிழிவு நோயாளிகள்தான் கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும். :-)

    ReplyDelete
  7. வாழ்த்துகள்.
    நாங்களும் உங்களுடன் உடன் வந்த மனநிறைவு.

    மு.இளங்கோவன்
    புதுச்சேரி

    ReplyDelete
  8. நன்றி முனைவர் அவர்களே!

    ReplyDelete