header-photo

“ஈழ வலைப்பதிவுகளை பற்றி ஓர் ஆய்வு”.


கடந்த ஓராண்டு காலமாக இளம் ஆராய்ச்சியாளர் பட்டத்திற்க்கென ஈழம் வலைப்பதிவுகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு பேராசிரியர் முனைவர் பே.கோவிந்தராஜ் அவர்களின் வழிகாட்டுதலில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்க்கு சமர்ப்பித்துள்ளேன்.   
                                         பேராசிரியர் முனைவர் கோ. ரவிந்தரன் அவர்களால் மூன்று வருடம் முன்பு அறிமுகமான வலைப்பதிவுகள் எனது வாழ்வில் ஒரு பெரும் வாசிப்பு தளமாக அமைந்தது. தமிழ் ஊடகங்களால்  ஈழ செய்திகள்  தர இயலாத சூழலில் தமிழ்மணம் வழி உண்மையான செய்தி அறியமுடிந்தது என பேராசிரியரின் வலைப்பதிவில் வாசித்திருந்தேன். இந்த மைய்ய கருத்தை தேடும் பணியாகவே இவ் ஆராய்ச்சி  என்னை  இட்டு சென்றது.
வலைப்பதிவுகள் முதல் முதலாக பாட பகுதியின் பாகமாகவே எங்களுக்கு அறிமுகமாகியது.  வகுப்பு-தேற்வுக்கென வாசிப்பாளராகிய நான் பின்பு வலைப்பதிவுகளுக்கு என என் நேரத்தை நிறையவே செலவிட்டேன். சில வலைப்பதிவுகளை வாசிக்கும் போது நாம் பத்திரிக்கைகளில்  இருந்து பெறும் செய்தியை விட ஆழவும் சாரமுள்ளதாக இருந்தது. மேலும் தனி மனிதர்களின் பார்வை  நம்மை வாசிப்பின்  மற்றொரு தளத்திற்க்கு இட்டு செற்றதை காணமுடிந்தது.                                                                                                                                                                                                           ஈழப்போர் செய்திகளை பத்திரிக்கையின் வாசித்த போது நான் கண்டது  ஈழ செய்தி பத்திரிக்கைக்கு பத்திரிக்கை அதன் அர்த்தம் கொள்ளுதல் மாறுபட்டு கொண்டே  இருந்தது.  அத்தருணத்தில் என்னுடைய பார்வை வலைப்பதிவுகளை நோக்கி சென்றது.  பத்திரிக்கைகள் ஈழத்தை  பற்றி கதைப்பதை தவிர்த்து, வலைப்பதிவர்களான சாதாரண மக்கள், என்ன கூறுகின்றனர் என்ற அறியும் நோக்குடன் ஈழ வலைப்பதிவுகளை தேடி சென்றேன்.  தனி  மனிதர்களின், சிறப்பாக அம்மண்ணின் மக்களான ஈழ மக்களின் கருத்து எண்ணங்கள் ஆசைகள், விருப்பங்கள், அரசியல் பார்வை,  அறிய முடிந்தது.  அவர்களுடைய கலாசாரம், ஆசைகள், உரிமை எவ்வாறு புரக்கணிக்கபடுகின்றது,  அரசியல் மற்றும் அதிகார மோகத்தால் ஒரு இனமக்கள் எவ்வாறு நசுக்க படுகின்றனர் என காண இயன்றது. ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என அறியப்படும் ஊடகங்களால் அரசியல் மற்றும் சில காரணங்களுக்காக உண்மை மறைக்கபட்டு  திரிக்க பட்ட செய்திகள் தரப்படும் சூழலில் தனி மனிதர்களால் எழுதப்படும் வலைப்பதிவின் தேவை, தாக்கம் அதிகமாகின்றது என கண்டுகொண்டேன்.
எனது பாடப்பிரிவும் ஊடகத்துறை சார்ந்து இருந்ததால் இக்கருத்தை தேடும் விதமாகவே எனது ஆராய்ச்சியை அமைத்துகொள்ள முடிவெடுத்தேன். மிகவும் விருவிருப்பான நாட்களாக இருந்தது. எனது   ஆராய்ச்சிக்கு என  6 வலைப்பதிவுகளை தேர்ந்து  எடுத்துள்ளேன்.   இவ்வலைபதிவுகள் தனி மனிதர்களின் எண்ணங்களாக இருக்க வேண்டும் மேலும் ஈழசெய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படுவதாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும்  எச்சரிக்கையாக இருந்தேன்.  உள்ளடக்க பகுந்தாய்வு முறையில் பண்பார்ந்த மற்றும் அளவுசார்ந்த மதிப்பீடுகள் கொண்டு ஆராய்ச்சி முடிவுக்கு எட்டியுள்ளேன்.
தலைப்பை  தேர்ந்தெடுக்கும் உரிமை தந்தது, மேலும் ஆராய்ச்சியை நடத்த வழிகாட்டி  உற்சாகப்படுத்திய   எங்களது துறைத் தலைவர்
பெ. கோவிந்தராஜு அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.  தனி மனித சுதந்திரத்தை என்றும் மதிப்பவர் எங்கள் துறைத்தலைவர்.
இவ்வாராய்ச்சிக்கு என 517 பதிவுகளை மிகவும் ஆழமாக வாசிக்க பட்டாலும் இதன் பொருட்டால்  பல உலக நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள பல ஈழ தமிழர்களின்  வலைத்தளங்களுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றேன்.  மிகவும் அருமையான  அறிவுசார்ந்த மக்களிடன் கலந்துரையாடல் மிக்க மகிழ்ச்சியை தந்தது.  எனது ஆராய்ச்சிக்கென நான் சில விளக்கங்களை இணையம் வழியாக வலைப்பதிவர்களிடம் ஆராயும் போது, எவ்வித தயக்கவும் இன்றி மிக சிறிய கால அளவுக்குள் சில வேளைகளில் 2 அல்லது 3 மணி நேரத்திற்க்குள்ளாக  எனக்கு  பதில் தந்து உதவியுள்ளனர்.  மேலும் சில நல்ல வலைப்பதிவுகளை  எனக்கு அறிமுகபடுத்தியுள்ளனர். அவர்களுடய பண்பார்ந்த எழுத்து,சிந்தனை எனக்கு உற்சாகமூட்டியுள்ளது.  நண்பர்களாகவும் சகோதர்களாகவும் என் வாழ்வில் வந்து சென்ற என் ஈழ சகோதர்களை வணக்குகின்றேன். அவர்களின் சிந்தனை வளம், சுதந்திர தாகம், தனிமனித ஆளுமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. சிறப்பாக நான் தேர்ந்தெடுத்த வலைப்பதிவுகளின் ஆசிரியர்களாம் -வலைப்பதிவர்கள் கானா பிரபா, தமிழ் சசி, தீபச்செல்வன், தமிழ் நதி, ரிஷான் ஷாரீப் போன்ற என் இனிய வலைப்பதிவர்களுக்கு என் நன்றிஐ காணிக்கையாக்குகின்றேன்.
மேலும் ஆக்கபூர்வமான சொல்களால் என்னை உற்சாகப்  படுத்திய பேராசிரியர் முனைவர் கோ. ரவீந்திரன், பேராசிரியர் முனைவர் வெ நடராஜன், பேராசிரியர் நடராஜன் பொன்னம்பலம், சவேரியார் கல்லூரி ஆங்கிலத்துறை விரிவுரையாளர் ஜேசன் பிர்ஸ்லி ராஜ் நண்பர் ராம்ஜி, தூபாயில் பணிபுரியும் நண்பர் சய்யப்துள்ளா, சஞ்சயன் மாணிக்க ராஜ், முனைவர் மு இளங்கோ,  தோழி கிருஸ்டி சில்வெஸ்டர், போன்ற சான்றோரையும் இத்தருணத்தில் நினைவு கூறுகின்றேன்.
மேலும் எனது எழுத்தை சரிபார்த்து தந்த   சிவந்தி ஆதித்தனார் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் சேவியர் பெஸ்கி க்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.                                                                                                                                                எனது துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், என் வகுப்பு தோழர்கள், என் பெற்றோர், என் தங்கை, தம்பி, என் கணவரின் சகோதரிகள், கணவரின் நண்பர்கள், இவர்களின் நல் எண்ணமே என்னை முன் நடத்தியது.
இவ்ஆராய்ச்சியின் தாக்கத்தால், பூவுடன் சேரும் நாரும் மணம் பெறும் என்பது போல்  நானும் ‘ஜோசபின் கதைக்கிறேன்’  என ஒரு வலைப்பதிவை உருவாக்கி எனது சிந்தனையும் பதிவுசெய்து கொண்டு வருகின்றேன். மேலும் எனது ஆராய்ச்சிக்கு என வலைப்ப்திவர்களை எழுத தூண்டும் காரணிகள் மற்றும் மனமகிழ்ச்சி ஏது என அறிய முற்பட்டேன். மறுஇடுக்கைகள் வழியாக வலைபதிவர்கள் எழுத உந்தபடுவதை என் வலைபதிவுக்கு நான் பெறும் மறு இடுகை வழியாக  அனுபவ பூர்வமாக உணரமுடிந்தது.
மேலும் எனது அன்பு கணவரை நினைத்து பார்க்கின்றேன். அவருடைய இக்கட்டான சூழல் மத்தியிலும்  வெறும் ஆசை என நான் கண்ட கனவை நனைவாக்கியவர்.  முதுகலை பட்ட படிப்பு மேலும் இளம் ஆராய்ச்சி பட்ட படிப்பு ,  என  என்னையும்  இரு பிள்ளைகளுடன் சேர்த்து மூன்றாவது பிள்ளையாக நினைத்து படிக்க வைத்தார்.   என்னவரின் அன்புக்கும் தியாகத்திற்க்கும்  எனது ஆரய்ச்சியை சமர்ப்பிக்கின்றேன்.                                        என் குழந்தைகளுக்கும் நன்றி செலுத்த கடமைபட்டுள்ளேன்.  பல வேளைகளில் அவர்களுடன் விளையாடும் நேரம் வலைப்பதிவுகளில் ஆழ்ந்து அவர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளேன்.  பல வேளைகளில் கணிணிக்கென எங்களுக்குள் சமரசம் ஏற்ப்படாது  பெரும் வழக்கிட்டு, என்னவர் வந்து பஞ்சாயத்து செய்து வைக்கும் அளவுக்கு எங்கள் சண்டையை கொண்டுசென்றுள்ளோம். இருப்பினும் என்னை உருவாக்கும் என் சிற்பிகள்-என் குழந்தைகளையும் நினைத்து கொண்டு எனது ஆராய்ச்சி கட்டுரையை முன்னுரை, முன்நிகழ்ந்த புனராய்வு(Review of Literature), ஆராய்ச்சி,  ஆராய்ச்சி முடிவு, முடிவுரை, நான் சென்ற பாதைகள் என பிரித்து பல  பதிவுகளாக பதிந்துள்ளேன். 
தங்களின் கருத்தையும்  அறிய  ஆவலுடன் அன்பு தோழி,
சகோதரி ஜோசபின் பாபா.

11 comments:

வலசு - வேலணை said...

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

cho lingam said...

vazthukkal

கானா பிரபா said...

வணக்கம் சகோதரி

உங்கள் பெருமுயற்சியில் இரு சிறு துளியாக நான் இருந்ததில் மிக்க மகிழ்வடைகின்றேன். உண்மையில் இந்தப் பணியை நீங்கள் வெகு சிரத்தையோடு செய்திருக்கின்றீர்கள் என்பதை
அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT WORK! GREAT SERVICE! PLEASE CONTINUE THIS!!!

shafi said...

அன்புத் தோழிக்கு வணக்கம்..... தங்களது ஆராய்ச்சி கட்டுரையை படிக்கும் வாய்ப்பினை எனக்கு தந்ததற்கு முதலில் என்னுடைய நன்றியை உரித்தாக்குகிறேன்.
தங்களின் கடின உழைப்பு அதில் தெளிவாகத் தெரிகிறது . ஈழம் பற்றிய பல அறிய உண்மைகள், என்போன்றவர்களுக்கு இதன் மூலம் அறிய தந்தமைக்கு நன்றிகள் பல .தங்களுக்கும் தங்கள் வழிகாட்டி பேராசிரியர் பெ.கோவிந்தராஜு அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன் .மேலும் தங்களது ஆராய்சிக் கட்டுரை வெற்றி பெறவும் அதன் மூலம் தாங்கள் ஆராய்ச்சியாளர் பட்டம் பெறவும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை சமர்பிக்கிறேன்..

வாழ்த்துக்களுடன் தங்களின் இணையத் தோழன்...

Shafiullah
Dubai.

ராம்ஜி_யாஹூ said...

பாராட்டுகள். தமிழ் வலைப்பதிவுகள் குறித்த ஆய்வினை மேற்கொண்ட உங்களுக்கு தமிழ் அன்னையின் சார்பில் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

தமிழை பாமரர்களிடம் எடுத்து சென்ற பாரதியின் ஊரை சார்ந்தவன் என்ற முறையிலும் , சுந்தரனார் பல்கலைகழகம் அமைந்த பொழுது ஆரம்ப நாட்களில் கூடவே இருந்து தோள் கொடுத்தவன் , எ எல் சுப்பிரமணியம், வைகோ, எம் எஸ் சுதர்சன், பொன் பசுங்கிளி, ஷேக்தாவூது , சபாபதி மோகன் ஆகியோரது நண்பன் என்ற முறையில் அதிகமாகவே அபிஷேகப் பட்டியில் அதிகம் உரிமை உண்டு எனக்கு.

ஈழம் பற்றிய உங்களின் இந்த ஆய்வு சமகால மாணவர்களுக்கும், வரும்கால மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறுதியிட்டு பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

P.Natarajan said...

Dear mam
One of the best work i have seen in recent times.It is unique and remarkable in many ways.
just went through with ur findings and conclusion..very nice.Hope u better more in you Doctorate..
regards
natarajan.ponnambalam

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சகோதரி,

வீண் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளவரவேண்டுமென பொதுவாக யாரும் ஆய்வுக்குட்படுத்தத் தயங்கும் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.

மிகப் பரந்தளவினாலான தேடலுக்குட்பட்டு, மிகுந்த ஊக்கத்தோடும் முயற்சியோடும் பல பதிவுகளை வாசித்துச் செயல்பட்டிருக்கிறீர்கள். ஒரு இல்லத்தரசியாக, தாயாக இருந்துகொண்டு இவ்வாறான ஆய்வுகளைச் செய்வது சிரமம். உங்கள் கணவரைப் பாராட்டவேண்டும்.

பேராசிரியர் முனைவர் பே.கோவிந்தராஜ், உங்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமைந்திருக்கிறார். அவருக்கும் எனது பாராட்டுக்கள்.

எனது பதிவுகளையும் உங்கள் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்திருப்பதில் எனது மகிழ்ச்சியும் நன்றியும்.
வாழ்த்துக்கள் சகோதரி !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

கலையரசன் said...

நீங்கள் எழுதிய ஈழ வலைப்பூக்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை நேரம் ஒதுக்கி வாசித்தேன். மிக அருமையான, ஆழமான, விரிவான ஆய்வு. பாராட்டுகள். ஈழ தமிழ் வலைப்பதிவுகள் கவனத்திற்கு எடுக்கப்பட்டு வருவது ஆரோக்கியமான ஜனநாயக சூழலை எடுத்துக் காட்டுகின்றது. அவற்றை பல்கலைக்கழக ஆய்வுக்காக தேர்ந்தெடுத்ததற்காக, அதற்கு செலவிட்ட உழைப்பிற்காக நாங்கள் தலைவணங்க வேண்டும். உங்கள் கணவர், குழந்தைகள் என்று முழுக் குடும்பமும் உங்கள் உழைப்புக்கு உறுதுணையாக இருந்ததை அறிந்து பூரிப்படைந்தேன். இந்த ஆய்வில் நானும் பல விடயங்களை அறிந்து கொண்டேன். வலைப்பூக்களின் தோற்றம், சமூகத்தில் அவற்றின் செல்வாக்கு என்பன மட்டுமல்லாது, ஈழ வலைப்பதிவுகள் குறித்து விரிவான தகவல்களையும் தெரிந்து கொண்டேன். அந்த வலைப்பூக்கள் வளர்ந்த வேகமும், பின்னர் ஏற்பட்ட தேக்கமும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன. அது ஏன் என்று பிறிதொரு ஆய்வு அவசியம் எனக் கருதுகின்றேன். இந்த இடத்தில் பலரின் கவனிப்பை பெறாத யதார்த்தத்தை தெரிவிக்க வேண்டியுள்ளது.

ஈழ கலாச்சார தளத்தில் இயங்கிய வலைப்பூக்கள் தனித்துவமானவை. சந்தேகத்திற்கிடமின்றி அவை சுதந்திர கருத்துப் பரிமாற்றத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளன. ஆனால் ஈழ அரசியல் வலைப்பூக்கள் Corporate Media வுக்கு மாற்றாக என்றும் இருந்ததில்லை. அவை மிகத் தீவிரமாக இலங்கை, இந்திய அரசுகளை எதிர்த்து வந்தன. அது மட்டுமே சுதந்திர ஊடகத்திற்கான சிறந்த அளவுகோலாக நான் கருதவில்லை. குறிப்பிடத்தக்க சில தமிழ் தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்கள் கொண்டிருந்த கருத்துகளையே, வலைப்பூக்களும் பிரதிபலித்தன. சில நேரம் அவற்றில் வந்த பத்திகளை அப்படியே நகல் பிரதி எடுத்து போட்டு வந்தார்கள். ஈழப் பதிவர்களிடையே நிலவிய கருத்து முரண்பாடுகளும் கவனத்தில் எடுக்கப் படவில்லை எனக் கருதுகிறேன். சில புலம்பெயர்ந்த ஈழப் பதிவர்களின் எழுத்துகள், ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பதிவர்களை எரிச்சலூட்டியதையும் நான் அறிவேன்.

மேற்குறிப்பிட்ட விமர்சனங்கள் தமிழக சூழலில் அன்னியமாக தோன்றலாம். எது எப்படியிருப்பினும் தமிழுலகிற்கு ஈழ வலைப்பதிவர்கள் ஆற்றிய பங்களிப்பும், அவற்றை ஆவணப்படுத்திய ஜோசபினும் வரலாற்றில் பதியப்படுவார்கள் என்பது நிச்சயம்.

J.P Josephine Baba said...

மிக்க நன்றி,நன்றி!

john said...

super akka

Post Comment

Post a Comment